சி.பா.ஆதித்தனார் அவர்களின் நினைவு நாள்.. பாமர மக்களுக்கு புரியும் வகையில் செய்தி நடை..
சி.பா.ஆதித்தனார் அவர்களின் நினைவு நாள்:
இன்று தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார் அவர்களின் 43வது நினைவு நாள். அவரைப் பற்றி இன்றைய தலைமுறைகள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். தமிழ் நாட்டில் இதழியல் முன்னோடியான இவர், இன்றைய முன்னணி நாளிதழ்களில் ஒன்றான தினத்தந்தி என்னும் தமிழ் நாளிதழைத் தொடங்கியவர். அரசியலிலும் ஆர்வம் கொண்டிருந்த இவர் தமிழ் நாடு சட்டப்பேரவைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். சட்டத்துறையில் கல்விகற்ற இவர், தமிழ்ப்பற்று, நாட்டுப்பற்று ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட தனது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதியாகப் பத்திரிகைத் துறையிலேயே தனது கவனத்தைச் செலுத்தினார்.
பாமர மக்களுக்கு புரியும் வகையில் செய்தி நடை:
தனது கொள்கைகளைச் செயற்படுத்தும் ஆர்வத்தில் நாம் தமிழர் என்னும் கட்சி ஒன்றையும் தொடங்கினார். எனினும், காந்தியின் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டம் கூர்மையடையத் தொடங்கியபோது தனது கட்சியின் செயற்பாட்டை இடை நிறுத்தினார். தமிழ் வளர்ச்சி, தமிழ் உணர்வு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தித் தனது பத்திரிகைகளில் செய்திகளையும், பல்வேறு அம்சங்களையும் வெளியிட்டு வந்த ஆதித்தனார், அக்காலத்தில் நிலவிய உயர்தட்டு மக்கள் வாசிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்த மொழி நடையைத் தவிர்த்து, சாதாரண மக்களை முன்னிலைப்படுத்தி எளிய தமிழ் நடையைக் கையாண்டார். இதனால் பரந்த அளவில் தமிழ் நாட்டில் வாசிப்புப் பழக்கம் பரவ வழிவகுத்தார். அடிப்படையான எழுத்தறிவு பெற்றிருந்தவர்கள் மத்தியில் கூட, செய்திகளை வாசிக்கும் போக்கு வளர இவரது இதழியல் முயற்சிகள் வழி வகுத்தன.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை:
மேலும் அண்ணார் அவர்களின் நினைவு நாளில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் சி.பா.ஆதித்தனார் அவர்களின் புகழை நாம் போற்றி வணங்க வேண்டும் என்று கூறுகிறார். இது குறித்து அவர் மேலும் கூறும் பொழுது, "தமிழகத்தின் முக்கிய ஊடகங்களில் ஒன்றாக தினத்தந்தி நாளிதழை உருவாக்கியதோடு, சமூகப் பணிகளிலும் சிறந்து விளங்கியவர். அமைச்சராகவும், சட்டப் பேரவைத் தலைவராகவும் சீரிய மக்கள் பணி மேற்கொண்டவர். தமிழ்ப் பற்றும், தேசப் பற்றும் மிகுந்த ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களது புகழைப் போற்றி வணங்குகிறோம்" என்று கூறினார்.