மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு அரசியலமைப்பிற்கு எதிரானது!...... காங்கிரஸ் திட்டத்தை அம்பலப்படுத்தும் பாஜக தலைவர்கள்!
நாடு முழுவதும் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்படுவது காங்கிரஸ் வெளியிட்ட வாக்குறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு வழங்கப்படும் என்ற வாக்குறுதி! ஆனால் இதனை அமல்படுத்துவது என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று மூத்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையை பறிக்கும் காங்கிரஸ்:
முதலில் ராஜஸ்தானில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அரசியலமைப்பு சட்டம் எழுதப்பட்ட போதே மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு எதிர்க்கப்பட்டது. எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டன. ஆனால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை என்று கூறினார். ஆந்திர பிரதேசத்தில் 2004 இல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பொழுதும் எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு குறைக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டது. இதனை முதலில் சோதனை ரீதியில் காங்கிரஸ் அமல் செய்தது. பிறகு அதனையே நாடு முழுவதும் வழங்க விரும்பியது. இப்படி 2004 முதல் 2010 க்கு இடையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் காங்கிரசால் அதனை செய்ய முடியவில்லை.
இருப்பினும் 2011இல் காங்கிரஸ் நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முயற்சித்தது. வாக்கு வங்கி அரசியலுக்காக எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை காங்கிரஸ் பறித்ததோடு அரசியலமைப்பையும் மதிக்கவில்லை என்று கூறினார்.
முஸ்லிம் லீக் போல இருந்த காங்கிரஸ் தேர்தல் அறிக்கை:
இதனைத் தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா பகுதியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, காங்கிரஸ் தன் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பொழுதே முஸ்லிம் லீக் போல இருப்பதாக நான் கூறினேன். மத அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது இந்தியாவில் கிடையாது என்று அம்பேத்கர் தலைமையிலான அரசியலமைப்பு குழு முடிவெடுத்திருந்தது. ஆனால் அம்பேத்கரின் வார்த்தைகளையே வாக்குக்காக காங்கிரஸ் தற்போது உதாசீனப்படுத்தியுள்ளது என்று இதுவரை நடந்தவற்றை மேற்கோள் காட்டி பிரதமர் நரேந்திர மோடி காங்கிரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.