திரைப்படத் துறையில் உலகளாவிய மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது: பிரதமர் மோடி!
மும்பையில் உள்ள ஜியோ உலக மையத்தில் இந்தியாவின் முதலாவது உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மகாராஷ்டிரா தினம் மற்றும் குஜராத் மாநில தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்தார். அனைத்து சர்வதேச பிரமுகர்கள், தூதர்கள் மற்றும் படைப்பாற்றல் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் வந்திருப்பதை குறிப்பிட்ட பிரதமர், இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் கலைஞர்கள், புதுமைப் படைப்பாளர்கள், முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோர் திறமையையும், படைப்பாற்றலையும் கொண்ட உலகளாவிய அமைப்புக்கு அடித்தளம் அமைக்க ஒன்றிணைந்துள்ளனர் என்று அவர் கூறினார்.
வேவ்ஸ் என்பது ஒரு சுருக்கப்பெயர் மட்டுமே அல்ல என்றும், இது கலாச்சாரம், படைப்பாற்றல் மற்றும் உலகளாவிய தொடர்பைக் குறிக்கும் ஒரு அலை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் இந்த உச்சிமாநாடு திரைப்படங்கள், இசை, கேமிங், அனிமேஷன், கதைசொல்லல் ஆகியவற்றின் விரிவான உலகத்தை எடுத்துக்காட்டுகிறது என்று அவர் தெரிவித்தார். கலைஞர்கள் மற்றும் படைப்பாளர்களை ஒருங்கிணைக்கவும் ஒத்துழைத்து செயல்படவும் உலகளாவிய தளத்தை இது வழங்குகிறது என அவர் கூறினார். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனைவரையும் பாராட்டிய பிரதமர், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள சிறப்பு விருந்தினர்களை அன்புடன் வரவேற்றார்.
வேவ்ஸ் உச்சி மாநாட்டில் இந்தியாவின் வளமான சினிமா வரலாற்றைப் பிரதிபலிக்கும் வகையில் பேசிய திரு நரேந்திர மோடி, 1913 மே 3 அன்று இந்தியாவின் முதல் திரைப்படமான ராஜா ஹரிச்சந்திரா வெளியிடப்பட்டது என்றும், அதை முன்னோடி திரைப்படத் தயாரிப்பாளர் தாதாசாகேப் பால்கே இயக்கினார் என்றும் குறிப்பிட்டார். பால்கேவின் பிறந்த நாள் நேற்று (ஏப்ரல் 30) கொண்டாடப்பட்டதை பிரதமர் நினைவு கூர்ந்தார். கடந்த நூற்றாண்டில் இந்திய சினிமாவின் தாக்கத்தை சுட்டிக்காட்டிய அவர், அது இந்தியாவின் கலாச்சார சாரத்தை உலகின் ஒவ்வொரு மூலைக்கும் வெற்றிகரமாக கொண்டு சென்றுள்ளது என்று கூறினார்