அக்னி வீரர்கள் திட்டத்தில் சேர்வதற்கான முகாம்: சென்னை இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!
திருமணமாகாத இளைஞர்கள் அக்னி வீரர்கள் திட்டத்தில் சேர்வதற்கான முகாமை இந்திய விமானப்படை சென்னையில் நடத்தவுள்ளது. இம்முகாமில் பங்கேற்க விரும்பும் தமிழ்நாடு, ஏனாம் பகுதி உள்ளிட்ட புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் மற்றும் லட்சத்தீவு பகுதிகளைச் சேர்ந்த ஆடவர்களுக்கான தேர்வு 2025 செப்டம்பர் 02, 03-ம் தேதிகளில் நடைபெறுகிறது. தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களைச் சேர்ந்த ஆடவர்களுக்கான தேர்வு 2025 ஆகஸ்ட் 27, 28-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
கேரளா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த ஆடவர்கள் 2025 ஆகஸ்ட் 30,31-ம் தேதிகளில் நடைபெறும் தேர்வில் பங்கேற்கலாம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களைச் சேர்ந்த மகளிர் 2025 செப்டம்பர் 5, 6-ம் தேதிகளில் நடைபெறும் தகுதித் தேர்வில் கலந்துகொள்ளலாம். இதற்கான தேர்வு சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் நடைபெறும். 2005 ஜனவரி 01 முதல் 2008 ஜூலை 01-க்குள் பிறந்தவர்கள் இந்த தேர்வு முகாமில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச பாடத் திட்டங்களில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள் இதில் கலந்து கொள்வதற்கு தகுதியுடையவர்கள் ஆவர்.
இயந்திரவியல், மின்னணுவியல், ஆட்டோமொபைல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் 3 ஆண்டு பட்டயம் பெற்றவர்களும் இத்தேர்வில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.