என்னது தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் வாயுவா? புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஹன்க் காஸ்!!
திருப்பூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் வஞ்சிபாளையம் முருகம்பாளையத்தில் செயல்பட்டு வரும் நிறுவனமான ஹன்க் நிறுவனத்தின் நிறுவனரும், முதன்மை விஞ்ஞானியுமான பேளூர் ராமலிங்கம் கார்த்திக் தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் வாயுவை பிரித்து சமையலுக்கும், தொழிற்சாலைக்கும் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளதாக செய்தி வெளியாகியது. இதற்கு ஹன்க் காஸ் பெயரிடப்பட்டுள்ளது.
இதன் அறிமுக நிகழ்ச்சியில் நடிகர் மற்றும் இந்த நிறுவனத்தின் முதன்மை இயக்குனரான சரத்குமார் மற்றும் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிறுவனரான நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கண்டுபிடிப்பு இயற்கையான முறையில் கார்பன் இல்லாத நிலையில் உள்ள தண்ணீரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், கிரீன் ஹைட்ரஜன் பயன்படுத்தி நெருப்பு உருவாக்கும் விதத்தில் தயாரித்துள்ளதாக கூறினார்.
20 ஆண்டுகள் நடத்திய ஆராய்ச்சியில் இதை கண்டுபிடித்து உள்ளதாகவும், இது மிகவும் பாதுகாப்பு மற்றும் கார்பன் இல்லாத எரிவாயுவாக இருக்கும் என்று கூறினார். இதைத்தொடர்ந்து சரத்குமார் கூறும் பொழுது இது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தகுந்தது போல இருக்கும் என்றும் இதற்கான அங்கீகாரம் பெறுவதற்காக மத்திய அரசின் எரிசக்தி துறை அதிகாரிகளிடம் பேசி இருப்பதாக கூறினார்.
இந்த கேஸ் வீடு மருத்துவமனை என பல இடங்களில் பயன்படுத்தலாம் என கூறினார். இத்தகைய கேஸ் பயன்பாட்டிற்கு வந்தால் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.