ஜெபத்திற்கு சென்றவர்களின் மீது வலுக்கட்டாயமாக குங்குமம் பூசியதாக எழுந்த புகார்!! விசாரணையில் வெளிவந்த உண்மை!
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஆலங்குளம் பகுதியில் வசிக்கும் 30க்கும் மேற்பட்டோர் கீழக்கல்லூர், நடுக்கல்லூர் கிராமத்திற்கு கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி சென்றபோது மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும், இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் மணிகண்டன் மகாதேவன் மற்றும் பாஜக கட்சியை சேர்ந்த அங்குராஜ் என 3 பேர் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு அவர்களை அருகில் இருந்த கோவிலுக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்று நெற்றியில் குங்குமத்தை வைத்து கடவுளிடம் மன்னிப்பு கேட்டு செல்ல கட்டாயப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் டேவிட் நிர்மல்துரை சுத்தமல்லி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த விசாரணையில் போதகர் டேவிட் நிர்மல்துரை தங்களிடம் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விட்டு அவராகவே அருகில் இருந்த விநாயகர் கோவிலுக்கு சென்று விபூதி பூசி கொண்டு இந்து மதத்தை அவதூறாக பேசியதாக வழக்கறிஞர் மணிகண்ட மகாதேவன் சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இது தற்பொழுது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.