"37 எம்.பி-க்களால் ஒரு பயனும் இல்லை என்று பேசப்படுவது வருத்தமாக இருக்கிறது" - கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் புலம்பல்!

"37 எம்.பி-க்களால் ஒரு பயனும் இல்லை என்று பேசப்படுவது வருத்தமாக இருக்கிறது" - கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் புலம்பல்!

Update: 2019-05-28 06:33 GMT

தமிழகத்தில் வெற்றி பெற்ற 37 நாடாளுமன்ற உறுப்பினர்களால் பலன் இல்லை என்பது தவறான பிரசாரம் என்று டி.கே.ரெங்கராஜன் எம்.பி. கூறினார்.


தட்சிண ரெயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன்(டி.ஆர்.இ.யு.) என்ற தொழிற்சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. செயல் தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். தலைவர் சுகுமாறன், பொது செயலாளர் மேத்யூ சிரியக், உதவி பொது செயலாளர் மாதவன் உள்பட நிர்வாகிகள் ரெயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வழி முறைகள் பற்றி ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.கே. ரெங்கராஜன் எம்.பி. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.


கூட்டம் முடிவில் டி.கே. ரெங்கராஜன் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-


"தீவிரவாதம், தேசப்பற்று, பாகிஸ்தான் அச்சுறுத்தல் என பாரதி ஜனதா செய்த பிரசாரத்தை நம்பி மக்கள் அக்கட்சிக்கு வாக்களித்து விட்டனர். அதனால் தான் நாடாளுமன்ற தேர்தல் முடிவு எதிர்பார்க்காத வகையில் வந்து உள்ளது. இதனுடைய விளைவை மக்கள் அடுத்த 5 ஆண்டுகள் அனுபவிப்பார்கள்."


தவறான பிரசாரம்


நாடாளுமன்ற தேர்தலில் மற்ற மாநிலங்களில் இடதுசாரிகளுக்கு தோல்வி ஏற்பட்டு இருப்பது உண்மை தான். இது தேர்தல் ரீதியான தோல்விதான். இயக்க ரீதியான தோல்வி அல்ல. இயக்க நடவடிக்கைகள் மூலம் தேர்தல் தோல்வியை சரி கட்ட முடியும். தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் வெற்றி பெற்ற 37 எம்.பி.க்களால் எந்த பலனும் கிடைக்காது என செய்யப்படும் பிரசாரம் தவறானது. இந்த எம்.பி-க்களால் தமிழக மக்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். தவறான பிரசாரம் செய்பவர்களுக்கு தான் பலன் கிடைக்காது.


தமிழகத்தில் குறுவை சாகுபடியை தொடங்குவதற்கு வசதியாக கர்நாடக மாநில அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும். தி.மு.க மற்றும் அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேச இருக்கிறோம்.


கோதாவரி- காவிரி இணைப்பு?


கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற இன்னும் 25 ஆண்டுகள் ஆகலாம். கோதாவரி- காவிரி இணைப்பு என்பது அரசியல் கோஷமாக தான் உள்ளது. விஞ்ஞான பூர்வமானதாக இல்லை. காவிரி நதி நீர் பிரச்சினையை தீர்த்து விட்டு தான் கோதாவரி இணைப்புக்கு முயற்சி எடுக்க வேண்டும் என்று பிரதமரை சந்திக்கும் போது வலியுறுத்த இருக்கிறோம்.


இவ்வாறு அவர் கூறினார்.


Similar News