அதிகரித்துவரும் சிலை திருட்டு - சென்னையில் அம்மன் சிலைகள் மாயம்!

அதிகரித்துவரும் சிலை திருட்டு - சென்னையில் அம்மன் சிலைகள் மாயம்!

Update: 2020-12-03 17:20 GMT

சென்னையில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் சாமுண்டி, துர்கை, பிரம்மகி ஆகிய சிலைகள் மர்மமான முறையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பல்வேறு கோவில்களில் உள்ள சிலைகள் தொடர்ந்து மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இன்று சென்னையை அடுத்த திருப்போரூர் ஓ.எம்.ஆர் சாலையில் அமைந்துள்ள கெங்கையம்மன் கோயில் சிலைகள் மர்ம நபர்களால் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.

நேற்று காலை வழக்கம்போல் கோவிலை திறப்பதற்காக பூசாரி வந்தபோது அங்கிருந்த சுமார் ஒன்றரை அடி உயரம் உள்ள மூன்று வெவ்வேறு சிலைகள் தனித்தனி சன்னதியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இந்த சிலைகள் சாமுண்டி, துர்கை, பிரம்மகி ஆகிய தெய்வங்களின் சிலைகள் என்று கோவில் பூசாரி தெரிவித்துள்ளார்.

கோவில் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்த கோவில் பூசாரி உடனடியாக அப்பகுதியில் உள்ள காவல் துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் காணாமல் போன சிலைகளைப் பற்றி கோயிலுக்கு சென்று விசாரித்தனர். பிறகு வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிலைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

கோவிலில் பாதுகாவலர்கள் இல்லை என்று தாக்கல் செய்யப்பட்ட  பொதுநல மனுவை உயர் நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில் தற்போது கோவில்களில் உள்ள உண்டியல்களில் கொள்ளை போவதும் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் உள்ள கோவில்களில் சிலைகள் அடிக்கடி திருட்டு போகும் சம்பவங்களும் தொடர்கதையாகி வருகின்றன. இதனால் கோவில் பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும் என்றும் அனைத்து கோவில்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News