27 நாடுகள், 27,200 கி.மீ, 593 நிகழ்ச்சிகள் - ஜூன் 21-ம் தேதி தாய் தமிழ்நாட்டிற்கு திரும்புகிறார் சத்குரு!
மண் வளப் பாதுகாப்பிற்காக தனது 65-வது வயதில் தனி ஆளாக 27 நாடுகளுக்கு சவாலான மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ள சத்குரு ஜூன் 21-ம் தேதி தாய் தமிழ்நாட்டிற்கு திரும்ப உள்ளார்.
மண் வளப் பாதுகாப்பிற்காக தனது 65-வது வயதில் தனி ஆளாக 27 நாடுகளுக்கு சவாலான மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ள சத்குரு ஜூன் 21-ம் தேதி தாய் தமிழ்நாட்டிற்கு திரும்ப உள்ளார். இதுவரை சுமார் 27,200 கி.மீ பயணித்துள்ள அவர் 593 நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
சத்தியமங்கலம் வழியாக தமிழ்நாட்டிற்குள் வரும் சத்குருவிற்கு பண்ணாரி கோவில் அருகே மேள தாளங்களுடன் தன்னார்வலர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். இதை தொடர்ந்து எஸ்.ஆர்.டி கார்னர், புங்கம்பள்ளி, செல்லப்பன் பாளையம், அன்னூர் பேருந்து நிலையம் என சூலூர் வரை 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களும், கிராம மக்களும் திரளாக வந்து சத்குருவை வரவேற்க உள்ளனர்.
பாதுகாப்பு துறை அமைச்சர் பங்கேற்பு
அதன்பிறகு, சூலூர் விமானப் படை தளத்தில் நடக்கும் 'மண் காப்போம்' இயக்க நிகழ்ச்சியில் சத்குரு அவர்கள் பங்கேற்கிறார். அந்நிகழ்ச்சியில் மாண்புமிகு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இதை தொடர்ந்து மாலையில் கொடிசியாவில் நடக்கும் உலக யோகா தின நிகழ்ச்சியிலும் சத்குரு பங்கேற்கிறார்.
பின்னர், அங்கிருந்து, பேரூர், மாதம்பட்டி, இருட்டுப்பள்ளம் வழியாக இரவு 8.30 மணியளவில் ஆதியோகியை வந்து அடைய உள்ளார். வரும் வழியில் உள்ளூர் கிராம மக்களும், பழங்குடி மக்களும் பாரம்பரிய இசை கருவிகளுடன் வரவேற்பு அளிக்க உள்ளனர். ஆதியோகி முன்பு நடக்கும் நிறைவு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து வரலாற்று சிறப்புமிக்க இப்பயணத்தை தொடங்கிய சத்குரு, கடும் குளிரையும், கன மழையையும் பொருட்படுத்தாமல் ஐரோப்பா கண்டம் முழுவதையும் சுற்றி வந்தார். இங்கிலாந்து, ஜெர்மனி, செக் குடியரசு, இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் என கிட்டத்தட்ட முக்கியமான அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்ற சத்குரு அந்நாடுகளின் அரசியல் தலைவர்களோடும், விஞ்ஞானிகளோடும் கலந்துரையாடினார்.