மகாராஷ்டிரா அரசியலில் இது புதுமை அல்ல:41 ஆண்டுகளுக்கு முன்பு சரத்பவார் காண்பித்த வழியில் செல்கிறார் அஜித்பவார்!

மகாராஷ்டிரா அரசியலில் இது புதுமை அல்ல:41 ஆண்டுகளுக்கு முன்பு சரத்பவார் காண்பித்த வழியில் செல்கிறார் அஜித்பவார்!

Update: 2019-11-25 05:07 GMT

சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவராக இருந்தவரும், பாஜகவுடன் கை கோர்த்ததால் 2 நாட்களுக்கு முன்பு அக்கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டவருமான அஜித் பவார் தனது சித்தப்பாவும் கட்சின் தலைவருமான சரத்பவாருக்கு துரோகம் இழைத்து விட்டதாக இப்போது குற்றம் சாட்டப்படுகிறார். சரத்பவாரும் இதே குற்றச்சாட்டைக் கூறிவருகிறார்.


ஆனால் இதே சரத்பவார் 41 ஆண்டுகளுக்கு முன்பு தான் இருந்த காங்கிரஸ் கட்சியிலிருந்து கொண்டே கட்சி எம்எல்ஏக்களில் சிலரை தன்பக்கம் வளைத்து ஜனதா கட்சியுடன் சேர்ந்து காங்கிரஸ் தலைமையிலான அரசை கவிழ்த்து ஆட்சி அமைத்தார் என்ற முந்தைய சம்பவங்களை மூத்த அரசியல் ஜாம்பவான்கள் நினைவு கூர்ந்துள்ளனர். அவர்கள் கூறியதாவது:


கடந்த 1978-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஸ்தாபன காங்கிரஸ் கட்சி, இந்திரா காங்கிரஸ் எனவும் காங்கிரஸ் (எஸ்) எனவும் இரண்டாகப் பிரிந்தது. இதில் தற்போதைய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் (எஸ்) கட்சியில் இருந்தார். அடுத்த பிப்ரவரி மதத்தில் மஹாராஷ்ட்ராவில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.


காங்கிரஸ் (எஸ்) 69 இடங்களையும், இந்திரா காங்கிரஸ் 65 இடங்களையும், மொரார்ஜி மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு தலைவர்கள் அடங்கிய ஜனதா கட்சி 99 இடங்களையும் பெற்றன. இதனால் மாநிலத்தில் தனித்து ஆட்சி அமைக்கும் வகையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.


இந்த நிலையில் காங்கிரசின் இரண்டு பிரிவுகளும் ஒன்று சேர்ந்து மாநிலத்தில் கூட்டணி அரசு அமைத்தன. அப்போது சரத்பவாரின் முதல்வர் பதவி வெறியால் இரு பிரிவுகளுக்கும் இடையே பதவிச்சண்டை ஏற்பட்டது. நிர்வாகத்தை சுமூகமாக நடத்த முடியவில்லை. அப்போது சரத்பவார் தனது முதல்வர் கனவு பதவி வெறியை நிறைவேற்றிக் கொள்ள  ஜனதா கட்சித்தலைவர்களில் ஒருவரான சந்திரசேகருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, கூட்டணி அரசில் இருந்து 38 எம்.எல்.ஏ.க்களை தன பக்கம் இழுத்து காங்கிரஸ் அரசை கவிழ்த்தார்.


அதன்பிறகு 38 எம்.எல்.ஏ.க்களுடன் ஜனதா கட்சி உறுப்பினர்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் கட்சி மற்றும் சிறிய கட்சிகளுடன் இணைந்து ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியை உருவாக்கி தனது 38-வது வயதில் மகாராஷ்டிரா முதல்-மந்திரியாக பதவியேற்றார். ஆனால் 1980- ஆம் ஆண்டு மீண்டும் பிரதமரக இந்திரா பதவியேற்றதும் சரத்பவாரின் அரசை கலைத்தார். அந்த அப்பட்டமான வேலையைத்தான் இன்றைக்கு அவருடைய சிஷ்யனான அஜித்பவாரும் செய்வதாகவும், இதில் ஒன்றும் புதுமை எதுவும் இல்லை என்றும் மூத்த அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Similar News