கழிவுநீர் தொட்டி போல் காட்சியளிக்கும் கோவில் குளம்- அலட்சியம் காட்டும் அறநிலையத் துறை!

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். குறிப்பாக பிரதோஷம் போன்ற விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் மிகவும் அதிகமாக காணப்படும்.

Update: 2021-02-21 18:42 GMT

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வர்ணீஸ்வரர் கோவில் குளம் கழிவுநீர் தேங்கும் சாக்கடை போல் காட்சியளிப்பதாலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயத்தில் இருப்பதாலும் அந்த கோவில் குளத்தை சுத்தப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வர்ணீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இது மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவிலாகும். ராமருக்கும் ராவணனுக்கும் நடந்த போரில் ராவணனை வதம் செய்துவிட்டு ராமபிரான் அயோத்திக்கு சென்று கொண்டிருந்த வழியில் இந்த கோவிலின் அருகில் உள்ள வர்ணதீர்த்தம் எனும் குளத்தில் நீராடியதாக தல வரலாறு கூறுகிறது.

 

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். குறிப்பாக பிரதோஷம் போன்ற விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் மிகவும் அதிகமாக காணப்படும். மிகவும் பழமையான கோயில் என்பதால் மேற்கூரை மற்றும் பக்கவாட்டில் விரிசல் ஏற்பட்டு மிகவும் சேதமடைந்த நிலையில் இக்கோவில் காணப்படுகிறது.

 

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தும் இந்த கோவில் சரிவர பராமரிக்கப்படாமல் இருந்து வருகிறது. குறிப்பாக இந்தக் கோவிலில் இருக்கும் குளத்தில் பச்சை நிறத்தில் கழிவு நீர் நிரம்பி உள்ளதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அசுத்தமாக இருக்கும் கோவில் குளத்தால் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சமீபத்தில் இந்த கோவில் குளத்தில் இளைஞர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. எனவே இந்தக் குளத்தில் தேங்கியுள்ள கழிவு நீரை வெளியேற்றி‌ குளத்தின் புனிதத் தன்மையை மீட்க அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News