சிறப்பு கட்டுரை : 'ஒன்றியம்' - இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான ஒற்றைச் சொல் ஆயுதமா?
"ஒன்றியம்" என்ற சொல் ஒன்றும் பயன்படுத்தபட கூடாத சொல் அல்ல. ஆனால் அதை பயன்படுத்துவோரும் அவர்களின் மறைமுக நோக்கங்களும் இங்கு விவாதிக்கப்பட வேண்டியது. ஒன்றியம் என்ற சொல் ஒற்றுமையை அல்லது ஒருங்கே இணைவதை குறிக்கும் பதத்தில் வர கூடிய ஒரு சொல்லே. ஆனால் அதன் பொருளுக்கு எதிராக, குறிப்பாக இந்திய ஒருமைபாட்டிற்கு எதிராக அச்சொல் இன்று பயன்படுத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தி.மு.க ஆட்சிக்கு வரும் முன்பு வரையிலும், மு.க.ஸ்டாலின் அவர்களின் பல்வேறு அறிக்கைகள் "மத்திய அரசு" என்றே குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்தவுடன், குறிப்பாக ஸ்டாலின் பதவியேற்றவுடன் பதிவிட்ட ஒரு ட்விட்டர் பதிவில் 'ஒன்றிய அரசு' என்ற வார்த்தையை பயன்படுத்தினார். பின்னர் அதை தி.மு.க ஆதரவு ஊடகங்கள் பெரிதாய் பேசி வீடியோக்களை வெளியிட்டனர்.
இம்மாதம் காணொளி காட்சி மூலம் நடைபெற்ற 43 வது GST கவுன்சில் கூட்டத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களும் "மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியம் இல்லை" என்று கூறியிருக்கிறார்.
தற்போது ஸ்டாலின் அவர்களின் மகனும், கட்சியில் ஸ்டாலினுக்கு பிறகான அதிகார மையமாக திகழும் சேப்பாக்கம் MLA உதயநிதி ஸ்டாலின் அவர்களும் தன்னுடைய டிவிட்டர் பதிவுகளில் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகிறார். இது எதோ இவர்கள் முதலாய் பயன்படுத்திய சொல் அல்ல. சில காலமாகவே வைகோ அவர்களும் இதை வலியுறுத்தி வந்தார்.
ஒருவேளை தி.மு.க மற்றும் ஒத்த சிந்தனையாளர்கள் யாவருக்கும் இந்திய தேசிய வரையறைக்குள் இருக்க விருப்பம் இல்லை என்றால் அதை வெளிப்படையாக சொல்லியே பேசலாம். இப்படி ஒற்றைச் சொல்லைக் கொண்டு சோசியல் மீடியாவில் திராவிட வீரர்கள் முஷ்டியை தூக்கி மீசையை முறுக்க தேவையில்லை.
ஆதலால் ஒன்றியம் என்ற சொல்லை விட, அதை ஏன் இப்போது தி.மு.க கையில் எடுத்துள்ளது என்பது தான் இங்கு ஆய்வுக்கும், விவாதத்திற்கும் உரியது. அந்த ஒற்றைச் சொல் மூலம் தி.மு.க சொல்ல வருவது என்ன? இந்திய தேசியத்திற்கு அப்பாற்பட்ட ஒரு கருத்தியலை, ஒரு சவாலை முன் வைக்கிறதா? பிரிவினையை பேச முற்படுகிறதா? மாநில உரிமைகள் என்ற பேரில் மீண்டும் ஒரு கலக பிரச்சாரத்தை துவங்குகிறதா? என்ற கேள்விகள் முன் வருகின்றன.