கன்னட திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட பிராமண வெறுப்பு காட்சிகள் : எப்படி சாத்தியமானது?
சமீபத்தில் வெளியான கன்னட திரைப்படமான பொகரு என்ற திரைப்படம், பிராமண சமூகத்தை இழிவுபடுத்தியதாக சர்ச்சையில் சிக்கியது. நந்தா கிஷோர் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை, பி.கே.கங்காதர் தயாரித்துள்ளார். ஆக்ஷன் கிங் அர்ஜுனின் சொந்தக்காரரான துருவா சர்ஜா மற்றும் ராஷ்மிகா மந்தண்ணா ஆகியோர் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கொரோனா தொற்றினால் கொண்டுவரப்பட்ட லாக்டவுன் விதிமுறைகளுக்கு பின்னர் வெளிவந்த முதல் பெரிய பட்ஜெட் கன்னட படம் இது தான். இந்த திரைப்படம் ஒரு ரவுடியின் வாழ்க்கையை சுற்றி வளம் வருகிறது. பிராமண சமூகத்தினரை மோசமாக சித்தரித்ததால் கர்நாடக பிராமண அமைப்புகள் இந்த திரைப்படத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து இந்த திரைப்படம் பெரும் சர்ச்சைக்கு ஆளானது.
இந்த திரைப்படத்தில் வெளிவந்த மோசமான காட்சிகளுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் குரல் எழுப்பப்பட்டது. திரைப்படத்தை இயக்கியவர்கள் பிராமண சமூகத்தை இழிவுபடுத்தியுள்ளனர் என்று குற்றம் சாட்டப்பட்டது.
முன்னனி நடிகையாக நடித்துள்ள ராஷ்மிகா மந்தண்ணா, இந்த திரைப்படத்தில் ஒரு பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த திரைப்படத்தின் ஒரு காட்சியில், ஹீரோ முரட்டுத்தனமாக கதாநாயகியின் வீட்டிற்குள் நுழைந்து, அவளது உறவினர்களை இழிவான வார்த்தைகளால் பேசுகிறார். அவர்களுடன் சண்டையிடுகிறார். ஒரு காட்சியில், படத்தின் கதாநாயகன் பூணுல் அணிந்த பிராமணர் ஒருவரின் தோளில் கால் வைத்திருப்பதைக் காணலாம். மற்றொரு காட்சியில், ஒரு பிராமணர் க்ரேனில் வைத்து தலைகீழாக தொங்கவிடபடுகிறார். பிறகு அவரைத் தாக்குகிறார் கதாநாயகர். மற்றொரு காட்சியில், பூஜைக்கு தண்ணீரை எடுத்துச் செல்லும் ஒரு பிராமணரை கதாநாயகன் ஆக்ரோஷமாக தாக்குகிறார். முகத்தை கழுவ ஹீரோ அந்த தண்ணீரைப் பயன்படுத்துகிறார். மேலும், மற்ற காட்சிகளில், பிராமணர்கள் உட்கொள்ளும் சைவ உணவைப் பற்றி அவர் சர்ச்சை கருத்துக்களைக் கூறுகிறார். இதோடு நின்றுவிடவில்லை. இந்து தெய்வங்களையும் இந்த திரைப்படத்தில் இழிவுப்படுத்தியுள்ளனர். கோயில்களில் தெய்வங்களை தரிசனம் செய்யும் இந்துக்களின் பாரம்பரியத்தை கதாநாயகன் கேலி செய்கிறார்.
கன்னட பத்திரிகையாளரும் திரைப்பட விமர்சகருமான சிறுபட் இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை யூடியூப்பில் வெளியிட்டார். பிராமண சமூகம் கொச்சைப்படுத்தப்படும் காட்சிகளை கடுமையாக எதிர்த்தார். இந்த வீடியோ வைரலாகி, திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு எதிரான கோபத்தை வரவழைத்தது. பிராமணர்கள் மட்டுமல்ல, பல சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பிராமணர்களை அவமதிக்கும் காட்சிகளுக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கினர்.
இந்த வீடியோவைத் தொடர்ந்து, பொகரு திரைப்படத்திற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு பலம் பெற்றது. இந்த எதிர்ப்புகள் துருவா சர்ஜாவின் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியது. துருவா சர்ஜாவின் ரசிகர்கள் சிறுபட்டிற்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்தனர். துருவா சர்ஜாவின் ரசிகர்கள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வீடியோவையும் சிறுபட் வெளியிட்டார்.