இந்தியாவில் புரதக் குறைபாடு - சவால்களும் விடைகளும்!
புரத சத்து நிரம்பியுள்ள பருப்பு வகைகள் உற்பத்தியில் நம் நாடு முன்னணியில் உள்ளது.
ஒரு ஆய்வின் படி, நமது நாட்டின் மக்கள் தொகையில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் புரதக் குறைபாடு உடையவர்கள் எனக் கணக்கிடப்படுகிறது. புரதம் நிறைந்த உணவுகளின் பற்றாக்குறையை நம் நாடு எதிர்கொள்கிறதா என்பது தான் நமக்கு எழும் முதல் கேள்வியாக உள்ளது.
ஏனெனில் புரத சத்து நிரம்பியுள்ள பருப்பு வகைகள் உற்பத்தியில் நம் நாடு முன்னணியில் உள்ளது, நமது உணவின் முக்கிய அங்கமாகவும் பருப்புகள் உள்ளது. ஆண்டுக்கு 20 மில்லியன் டன் என்ற அளவில், இந்தியா உலகின் பருப்பு வகைகளில் சுமார் 25 சதவீதத்தை உற்பத்தி செய்கிறது.
புரத சத்து உள்ள உணவுப்பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் இல்லையென்றால் இந்தியாவின் புரதக் குறைபாட்டிற்கான ஒரே லாஜிக்கான விளக்கம், இந்தியர்களுக்கு விழிப்புணர்வு இல்லாதது மற்றும் போதுமான அளவு புரதத்தை தொடர்ந்து உட்கொள்வதில்லை என்பதாகும். புரதக் குறைபாடு என்பது மிகவும் உண்மையான மற்றும் குறிப்பிடத்தக்க பிரச்சினையாகும், இதற்கு உடனடி மற்றும் அவசர நடவடிக்கை தேவைப்படுகிறது.
ஒரு சராசரி இந்தியருக்கு, புரதத்தின் பரிந்துரைக்கப்பட்ட உணவு அளவு, ஒரு கிலோ உடல் எடையில் 0.8 முதல் 1 கிராம் வரையாகும். ஆனால் தற்போது சராசரி உட்கொள்ளல் ஒரு கிலோ உடல் எடையில் சுமார் 0.6 கிராம் மட்டுமேயுள்ளது. மேலும் நகர்ப்புறத்தில் (4 சதவீதம்) மற்றும் கிராமப்புறத்தில் (11 சதவீதம்) என தனிநபர் புரத நுகர்வு குறைந்து வருவதாக தேசிய மாதிரி கணக்கெடுப்பு 2011-2012 தெரிவித்துள்ளது.
இது உலகின் பிற பகுதிகளுடன் முற்றிலும் மாறுபட்டது. உலகெங்கிலும் புரத நுகர்வு அதிகரித்து வருகிறது, சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 68 கிராம் என்ற சராசரியிருப்பதால், சராசரி புரத நுகர்வு அடிப்படையில் இந்தியா பின்தங்கியுள்ளது.
தேசிய உணவு ஊட்டச்சத்து நிறுவனத்தின் சமீபத்திய 'வாட் இந்தியா ஈட்ஸ்' அறிக்கையின் படி, இந்திய உணவுகள் முக்கியமாக தானியங்களை அடிப்படையாகக் கொண்டவை. தானியங்கள் மற்றும் தினைகள் முறையே நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் 51 சதவிகிதம் மற்றும் 65.2 சதவிகித ஆற்றலை (energy) பங்களிக்கின்றன, அதே நேரத்தில் பரிந்துரைக்கப்பட்ட பங்களிப்பு 45 சதவிகிதம் மட்டுமே; பருப்பு வகைகள், இறைச்சி, கோழி மற்றும் மீன் ஆகியவை நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு மொத்த ஆற்றலில் வெறும் 11 சதவீதத்தை மட்டுமே பங்களிக்கின்றன.