பத்து வருடம் எதிர்கட்சியாக இருந்த பசியில் தி.மு.க ஆட்சியமைந்தவுடன் இறங்கி 'அடிக்க' துவங்கியுள்ளனர் தி.மு.க அமைச்சர்கள்.
அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜியைக் குறிவைத்து அண்ணாமலை வீசியிருக்கும் வெடி, கடந்த ஒரு மாதமாக மின்வாரியத்தில் அனலைக் கிளப்பிய விவகாரம்தான். நிலுவையிலிருக்கும் சில பில்களை க்ளியர் செய்வதற்கு, அமைச்சருக்கு நெருக்கமான வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் 'கமிஷன்' கேட்பதாகப் புகார் எழுந்தது. இதைத் தற்போது வெளிப்படையாகப் போட்டுடைத்திருக்கும் அண்ணாமலை, "தூத்துக்குடி அனல் மின்நிலையத்திலுள்ள ஒப்பந்ததாரர்களுக்கு, கடந்த சில மாதங்களாகவே நிலுவைத்தொகையான 29.64 கோடி ரூபாய் க்ளியர் செய்யப்படாமல் இருந்தது. 4 பர்சன்ட் கமிஷன் பெற்றுக்கொண்டு, அந்த பில்லை க்ளியர் செய்திருக்கிறார்கள். மின்துறை அமைச்சர் இல்லத்திலுள்ள ஐந்து பேருக்கு, இந்த கமிஷன் தொகை எங்கே பெறப்பட்டது, எங்கே வைக்கப்பட்டிருக்கிறது என்கிற விவரமெல்லாம் தெரியும்" என்றார். இதை செந்தில் பாலாஜி தரப்பு எதிர்பார்க்கவில்லை.
அமைச்சர் துரைமுருகன்
ஆட்சியில் இரண்டாமிடத்தில் உள்ள துரைமுருகன் வசம் நீர்வளத்துறையும், கனிமவளத்துறையும் உள்ளன. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, பத்துக்கும் மேற்பட்ட தடுப்பணைகள் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவருகின்றன. இந்தப் பணிகளைக் கடந்த ஆட்சியில் கோலோச்சிய ஒப்பந்த நிறுவனங்களே மீண்டும் எடுத்துள்ளன. அதேபோல் திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கி காவிரி கடைமடை கால்வாய்ப் பராமரிப்புப் பணிகள் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளைவைத்து நடந்த பேரங்கள் தனி.
இந்தத் துறைகள் மட்டுமல்லாமல், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஊரக வளர்ச்சி, போக்குவரத்து, பால்வளம் ஆகிய துறைகளிலும் கமிஷன் புகார்கள் எதிரொலிக்கின்றன. நம்மிடம் பேசிய அந்தந்தத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர், "விவசாய இடங்களை வீடுகட்டும் இடங்களாக மாற்ற நான்கு லட்சம் கேட்கிறார்கள்" என புகார் எழுந்துள்ளது.
மேலும் போக்குவரத்துத் துறையில் தீபாவளியை முன்னிட்டு ஊழியர்களுக்கு இனிப்பு வழங்க ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்டது. இதில், 'முப்பது சதவிகிதம் கமிஷனைக் கொடுப்பவர்களுக்கு மட்டுமே ஆர்டர் வழங்கப்படும்' என வெளிப்படையாகவே சொல்லப்படுவதாக புகார் எழுந்துள்ளது.