ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு ஒரு கோடி நிவாரணம் கேட்ட அண்ணாமலை - 4 மணி நேரத்தில் அறிவித்த முதல்வர் ஸ்டாலின் !
"பணி நேரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு சிறப்பு சட்டம் எதுவும் கிடையாது, இது போன்ற நிகழ்வுகள் அந்த சிறப்பு சட்டம் வேகமாக வர வேண்டும் என்று நமக்கு நினைவூட்டுகிறது" என புதுக்கோட்டையில் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பூமிநாதன். இவர் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆடும் திருடும் கும்பல் ஒன்றினை விரட்டிச் சென்ற போது அக்கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவத்திற்கு கண்டம் தெரிவித்துள்ள பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை கூறியதாவது, "நவல்பட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கயவர்களால் நேற்று இரவு வெட்டிக் கொல்லப்பட்டார் என்கின்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலைப்பாட்டில் தான் நம்முடைய காவல்துறை சகோதர சகோதரிகள் பணியாற்றுகிறார்கள். பணி நேரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு சிறப்பு சட்டம் எதுவும் கிடையாது, இது போன்ற நிகழ்வுகள் அந்த சிறப்பு சட்டம் வேகமாக வர வேண்டும் என்று நமக்கு நினைவூட்டுகிறது.
மாநில அரசு கூட இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணத் தொகையை அறிவித்து அதை செயல்படுத்த வேண்டும். அன்னாரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்'' என கூறினார்.
அண்ணாமலை ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வேண்டும் என கோரிக்கை விடுத்த நான்கு மணி நேரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கொலை செய்யப்பட்ட காவல் துறை ஆய்வாளர் குடும்பத்திற்கு ஒரு கோடி நிவாரணம் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.