பித்தம் என்பது என்ன?அது உடலுக்கு நன்மையா? தீமையா?

நம் உடலில் உருவாகும் விதத்தைப் பற்றி பல்வேறு தவறான அபிப்பிராயங்கள் உள்ளன உண்மையில் பித்தம் என்பது நமக்கு நன்மை செய்கிறதா என்பது பற்றிய தகவல்

Update: 2022-08-16 08:15 GMT

நம் உடலில் உருவாகும் பித்தத்தைப் பற்றி பல்வேறு தவறான அபிப்பிராயங்கள் உள்ளன. உண்மையில் பித்தம் எப்படிப்பட்டது அது நமக்கு நன்மை செய்கிறதா? தீமை செய்கிறதா? என்ற கேள்வியோடு மருத்துவரை அணுகினால் அவர் இரண்டையும் செய்கிறது என்கிறார்.

பித்தம் ஒரு விதமான எண்ணெய் பசையுடன் இருக்கும். ஒரு திரவம்.இளகும் தன்மை கொண்டதாகவும் நீர்த்துப்போக கூடியதாகவும் இருக்கிறது.இந்தப் பித்தம் தொப்புள், இரைப்பை, வியர்வை, நிணநீர், இரத்தம், கண்கள் தோல் போன்ற இடங்களை தனது வசிப்பிடமாகக் கொண்டு வாழ்கிறது.


உடலுக்கு பித்தம் பல நன்மைகளை செய்கிறது. உண்ட உணவை ஜீரணிக்கச் செய்து அதுதான் உடலுக்கு தேவையான வெப்பம், ஒளி, தெளிவு, நினைவாற்றல், திறமை,மென்மை போன்ற நல்ல செயல்கள் எல்லாவற்றையும் செய்து உடலை பாதுகாக்கிறது.

நாம் தெளிவான மனிதர்கள் தான் என்று மற்றவர்களுக்குச் சொல்லாமல் சொல்கிறது.பித்தம் அளவோடு இருக்கும் வரைதான் இந்த நன்மையெல்லாம். இதே பித்தம் அதிகமாகி விட்டால் அவ்வளவுதான். தோலின் நிறம் மஞ்சளாக மாறும், சோர்வு உண்டாகும், புலன்கள் வலுவிழந்து போகும். நாவறட்சி,மூர்ச்சை, தூக்கம் குறைதல், கோபம் ஏற்படும்.

நமது பாரம்பரிய மருத்துவம் பித்தத்தை ஐந்து வகையாக பிரிக்கிறது. முதல்வகை இரப்பை, ஜீரணப்பை இவற்றின் நடுவில் இருக்கும் இந்த பித்தத்தை பாசகம் என்கிறார்கள். இது உடலுக்குச் சூட்டையும் உணவை செரிக்கவும் உதவுகிறது. அதனால் இதற்கு அக்னி என்ற பெயரும் உண்டு.

இரண்டாம் வகை ரஞ்சக பித்தம் எனப்படுகிறது.இது இரைப்பையை உறைவிடமாகக் கொண்டு அங்குள்ள உணவுவின் நீர், சத்தான பகுதிக்கு செந்நநிறத்தை அளிக்கிறது.

மூன்றாம் வகை ஸாதகம் எனப்படுகிறது. இது இதயத்தை தங்குமிடமாகக் கொண்டு அறிவு, நுண்ணறிவு, தன் நிறைவு, செயல்படுவதில் ஊக்கம் இவைகளைத் தந்து தனக்கு விருப்பமான புலப்பொருள் அடைதல், செயல் இவற்றின் ஈடுபாட்டினால் அதை நிறைவேற்றிக் கொள்ளுதல் ஆகியவற்றை செய்கிறது.

நான்காம் வகை ஆலோசக பித்தம். இது கண்களில் தங்கி அவற்றிற்குப் பார்க்கும் சக்தியை அளிக்கிறது. ஐந்தாம் வகை ப்ராஜக பித்தம் சருமத்தை உறைவிடமாகக் கொண்டு சருமத்திற்கு ஒருவித ஒளியை கொடுத்துஅதை நன்கு விளங்கச் செய்வதால் இதற்கு இந்தப் பெயர் ஏற்பட்டது.


காரம், புளி, உப்புச் சுவை, அசைவ உணவு வகைகள், எண்ணெயில் பொரித்த உணவு வகைகள், குளிர்பானங்கள் மதுபானம், பாக்கு சிகரெட் போன்றவை பித்தத்தைத் தூண்டி விட்டு அதன் சீற்றத்திற்கு காரணமாகி சுமார் 40 வகையான பித்த நோய்களை ஏற்படுத்துகின்றன.

பித்தத்தை கட்டுப்படுத்த இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும். இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு, தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.



 


Similar News