பழனி கோவில் நிதியில் ஆக்சிஜன் உற்பத்தி மையம்..!

Update: 2021-05-31 14:57 GMT

கோவில் நிதியில் கொரோனா நோயாளிகளுக்கு கட்சிக் கொடி மற்றும் சின்னங்களுடன் அன்னதானம் வழங்கும் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது பழனி தண்டாயுதபாணி கோவில் சார்பில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்படும் என்று உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் பெரிய கோவில்களின் நிதியிலிருந்து கொரோனா நிவாரண பணிகளுக்கு 10 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று அரசு சுற்றறிக்கை அனுப்பியது. பல கோவில்களில் ஒரு கால பூஜை செய்வதற்குக் கூட நிதியில்லை என்று பராமரிப்பில்லாமல் போட்ட அரசு, இதற்கு மட்டும் கோவில் நிதியை பயன்படுத்துவதா என்று விமர்சனங்கள் எழுந்தன.

கோவில் சொத்துக்களை வேறு பயன்பாட்டிற்கு உபயோகிக்க கூடாது என்று நீதிமன்றம் அறிவித்ததைச் சுட்டிக்காட்டி கோவில் நிதியை இந்து மதம் சாராத பணிகளுக்கு பயன்படுத்த கூடாது என்று சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து இந்த சுற்றறிக்கை திரும்ப பெறப்பட்டது. தற்போது புதிதாக பதவியேற்றுள்ள திமுக அரசு, நேரடியாக கோவில் நிதியில் கை வைக்க முடியாது என்று அறநிலையத் துறை மூலம் தினமும் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படும் என்று புதிய திட்டத்தை அறிவித்தது.

இதன்படி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள், பிற நோயாளிகள், அவர்களின் உறவினர்கள், சில சமயங்களில் மருத்துவ பணியாளர்களுக்கும் கோவில்களின் சார்பில் அன்னதானம் விநியோகிக்கப்படுகிறது. விநியோகத்தின் போது திமுக கட்சி கொடி, சின்னம் உள்ளிட்டவற்றோடு திமுக தலைவர் ஸ்டாலினும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவும் இடம் பெற்ற பேனர்களும் வைக்கப்பட்டதால் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.




இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் அந்தந்த கோவில்களின் படங்கள், சுவாமி படங்களை காட்சிப்படுத்தி கோவில்களின் மூலமே அன்னதானம் வழங்கப்படுகிறது என்று தெரியப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த பிரச்சினையே இன்னும் ஓயாத நிலையில் பழனி கோவில் சார்பில் ரூ.2 கோடி மதிப்பில் உற்பத்தி மையம் அமைக்கப்படும் என்று வெளியாகியுள்ள தகவல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழனியில் வணிகர் சங்கம் சார்பில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் பழனி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் மையம் அமைத்துக் கொடுக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் கலந்து கொண்ட உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, விரைவில் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் சார்பில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்படும் என்று கூறினார்.

கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டிருக்கும் இந்த அசாதாரண சூழலில் கோவில்கள் நிதி வழங்குவதிலோ அன்னதானம் செய்வதிலோ எந்தத் தவறும் இல்லை. ஆனால் இந்த முடிவுகள் கோவில் நிர்வாகங்களால் எடுக்கப்பட்டு, கோவில்களின் சேவைகளில் ஒரு பகுதியாக, கோவில்களால் தான் செய்யப்படுகின்றன என்று அனைவரும் அறியும் வண்ணம் செய்யப்பட வேண்டும். ஆனால் அரசுக் கட்டுப்பாட்டில் இருப்பதால், அரசு தன்னிச்சையாக முடிவெடுப்பதோடு, கட்சிப் பணியாகவும் அவற்றை மாற்றி விளம்பரம் தேடிக் கொள்வது வேதனைக்குரியது.

கோவில் சொத்துக்களை வழிபாடு தவிர வேறு எந்த உபயோகத்திற்கும் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டதை போலவே, கோவில் நிதியை மத வழிபாடு தொடர்பான செயல்பாடுகள் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிடுவதே இதற்கு தற்காலிக தீர்வாக அமையும்.

Source: Hindu Tamil

Tags:    

Similar News