ஈசனும் இயேசுவும் ஒன்றா? திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவரா? தொல் தமிழ் நூல்கள் கூறுவது என்ன?

Update: 2021-11-22 02:19 GMT

சிவபெருமானும் இயேசு ஒன்று என்றும் மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலே இயேசுவுக்கு கட்டப்பட்டது தான் என்றும் ஒரு நூல் வெளியீட்டு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்தக் கருத்துக்கள் தன்னுடையவை அல்ல என்றும் புத்தகத்தில் எழுதப்பட்ட சில குறிப்புகளைப் பற்றியே தான் பேசியதாகவும் திருமாவளவன் விளக்கம் அளித்திருந்தார். இந்த கருத்துக்கள் ஆய்வுக்கு உட்பட்டது என்று அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.


பலர் இந்து மத வழக்கங்களை பின்பற்ற தொடங்கியிருக்கும் கிறிஸ்தவர்கள் அவை இந்து மதத்துடன் தொடர்புடையவை என்பதை மறைக்க மொழி, இனம், பிராந்தியம் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. உதாரணமாக பொங்கல், ஓணம் ஆகியவை இந்து மதத்துடன் தொடர்புடையவை அல்ல என்றும் தமிழ், மலையாள பண்டிகைகள் என்றும் நிறுவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.


அந்த வகையில், திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவர் என்றும் "ஈசனும் இயேசுவும் ஒன்று" என்றும் நிறுவும் முயற்சியும் இந்து மதத்தின் நற்கூறுகளை களவாடும் முயற்சிகளில் ஒன்று. ஈசன், ருத்திரன், ஈஸ்வரன் என்று பல பெயர்களில் அறியப்படும் சிவபெருமானைப் பற்றி ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட வேதங்களில் இருந்தே‌ குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.


வேதம், உபநிஷதம் எல்லாம் போலி, ஆரியர்களின் கட்டுக்கதை என்று கூறுபவர்களுக்கு, தமிழ் இலக்கணத்தை வகுத்த தொல்காப்பியரும் சிவபெருமானைப் பற்றி தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் என்பது தெரியுமா? அகத்திணையின் ஐந்தாவது பாடலாக வரும் "மாயோன் மேய காடுறை யுலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்

சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே" என்ற பாடலே இதற்குச் சான்று.


இதில் குறிஞ்சி நிலக் கடவுளாகக் குறிப்பிடப்படும் சேயோன் தான் சிவன். இயேசு வெறும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு தான் பிறந்தார் என்பது கிறிஸ்தவர்களே நன்கறிந்த‌ விஷயம். ஆனால் தொல்காப்பியம் அதை விட பழமையானது என்பது தெரியாமல்‌ தான் அவர்கள் ஈசனும் இயேசுவும் ஒன்று என்கிறார்களா?


சிவனுக்கே சவால் விட்ட கிமு முன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நம்பப்படும் புலவர் நக்கீரரும் தன்னுடைய பல பாடல்களில் சிவனைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சேயோன், கூற்று என்ற பெயர்களாலும், காளையை ஊர்தியாகக் கொண்டவன், செஞ்சடை உடையவன், சூலத்தை ஆயுதமாகக் கொண்டவன் என்றும் நக்கீரர் தனது பாடல்களில் சிவனைப் பற்றி குறிப்பிடுகிறார்.


இவ்வளவு ஆவணங்கள், வரலாற்றுக் குறிப்புகள், ஆதாரங்கள் இருந்தும் இது வரை இந்து மத வழக்கங்களை களவாடி வந்த கிறிஸ்தவம் இப்போது கடவுள்களையே களவாடும் அளவுக்கு வந்து விட்டது. ஈசனும் இயேசுவும் ஒன்று என்ற பேராசிரியர் தெய்வநாயகத்தின் கூற்று அதைத் தான் காட்டுகிறது.


சைவமும் வைணவமும் தமிழர்களின் மதங்கள் என்று ஒப்புக் கொண்ட தெய்வநாயகம், வள்ளுவரை ஞானஸ்நானம் வாங்கிய கிறிஸ்தவர் என்று அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன ஏற்பட்டது என்று தெரியவில்லை. திருவள்ளுவரை களவாடும் முயற்சி இன்று நேற்றல்ல ஜி.யு.போப் காலத்தில் இருந்தே நடந்து கொண்டு தான் இருக்கிறது.


ஆனால் உண்மை என்ன? நெற்றி நிறையத் திருநீருடன் கழுத்து நிறைய ருத்ராட்ச மாலையுடன் தான் திருவள்ளுவருக்கு கோவில் இருக்கிறது. அவரது பிறந்தநாள் உட்பட இந்து முறையில் தான் விசேஷமாக கொண்டாடப்படுகின்றன. திருவள்ளுவர் ஒரு சமணர் என்றும் கூட சிலர் கூறி வரும் நிலையிலும், எங்கும் திருவள்ளுவருக்கு என்று சமணக் கோவிலோ கிறிஸ்தவ தேவாலயமோ இல்லை.


இந்துக்கள் மட்டுமே அவரை ஒரு சைவத் துறவியாக, நாயனாராக வழிபட்டு வருகின்றனர். திருக்குறளையும் திருவள்ளுவரையும் பற்றிப் பேசும் போது திருமாவளவன், "சனாதனத்தை வேரறுக்காமல் சமூக நீதியை வெல்ல முடியாது. அதற்கு திருக்குறள் ஒரு ஆயுதமாக இருக்க வேண்டும்" என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். திருக்குறள் பேசுவதே அந்த சனாதனத்தைப் பற்றித் தெரியாமல் இப்படிப் பேசினாரா அல்லது கிறிஸ்தவர்களின் களவாணித்தனத்துக்கு உதவி செய்ய இப்படிப் பேசானாரா என்பது அவருக்கே வெளிச்சம்.


நீத்தார் பெருமை என்ற அதிகாரத்தின் கீழ், "ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி" என்று ஒரு குறளை எழுதியிருக்கிறார் திருவள்ளுவர். இதில் வரும் இந்திரன் வேதங்களில் சிவன் மற்றும் திருமாலுடன் குறிப்பிடப்பட்ட வேதகாலக் கடவுள். பெரியாரைப் பிழையாமை என்ற மற்றொரு அதிகாரத்தில் "ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும்" என்ற குறளிலும் இந்திரனைப் பற்றி குறிப்பிடுகிறார் வள்ளுவர். அகத்தியரின் சாபத்தால் இந்திரன் பதவி இழந்த நிகழ்வை மேற்கோள் காட்டுகிறது இந்தக் குறள்.


மடியின்மை என்ற அதிகாரத்தில் 610வது குறளாக வரும் "மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு", மூன்று உலகங்களையும் அளந்த திரிவிக்ரமனாகிய திருமாலைக் குறிப்பிடுகிறது. "கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு" என்ற 269வது குறளில் மார்க்கண்டேயர் சிவபெருமானின் ஆசியால் கூற்றம், அதாவது விதி அல்லது எமனை வென்ற நிகழ்வைப் பற்றி குறிப்பிடுகிறது. 


இவ்வாறு இந்து மத வரலாற்று, ஆன்மீக நிகழ்வுகளையும் கடவுள்களையும் பற்றிய பல தகவல்கள் திருக்குறளில் காணக்கிடைக்கின்றன. ஆனால் உலகில் உள்ள வேறு எந்த மதத்திலாவது இத்தகைய நிகழ்வுகள், ஆதாரங்கள் உள்ளனவா? இது போக அழுக்காறாமை என்ற அதிகாரத்தில் "அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும்" என்று ஒரு குறள் உள்ளது. இதற்கு, பொறாமை குணம் கொண்டவனை லக்ஷ்மி தேவி அவளது அக்காளான மூதேவிக்கு அடையாளம் காட்டிவிட்டு அகன்று விடுவாள் என்று கலைஞர் கருணாநிதியே உரை எழுதியுள்ளார்.


"மடிஉளாள் மாமுகடி என்ப மடியிலான் தாள்உளாள் தாமரையி னாள்", சோம்பல் உடையவனிடம் மூதேவியும் விடாமுயற்சி உடையவனிடம் ஸ்ரீதேவியும் உறைவாள் என்ற பொருள் கொண்ட ஒரு குறளும் உண்டு. இதற்கும் கருணாநிதியே இரு தெய்வங்களையும் குறிப்பிட்டு உரை எழுதியுள்ளார். இந்த ஸ்ரீதேவி, மூதேவி வழிபாடு/நம்பிக்கை வேறு எந்த மதத்திலாவது இருக்கிறதா? இப்படி இன்னும் எத்தனையோ குறள்கள் இந்து மதக் கடவுளர்களையும் நிகழ்வுகளையும் குறிப்பிட்டும் மேற்கோள் காட்டியும் எழுதப்பட்டுள்ளன.


இவற்றை எல்லாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளாமல் எப்படி திருவள்ளுவர் ஒரு ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவர் என்று பேராசிரியர் தெய்வநாயகம் புத்தகம் எழுதினார் என்றோ, அதன் வெளியீட்டு விழாவில் சனாதனத்தை வேரறுக்க திருக்குறள் ஆயுதம் என்று திருமாவளவன் பேசினார் என்றோ ஆதாரப்பூர்வமாக விவாதிப்பவர்கள் வியப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. சொல்லப்போனால் திருமாவளவனின் இந்தக் கருத்து இந்துக்களை தங்கள் விரல்களை வைத்தே கண்களைக் குத்த வைக்கும் கிறிஸ்தவர்களின் முயற்சிக்கு ஆதரவாக இருப்பதை மறுக்க முடியாது.

Source: Chanakya TV

Tags:    

Similar News