ஜொலிக்கும் புதிய காசி கோவில் வளாகம்-திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

Update: 2021-12-13 07:56 GMT

வாரணாசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவில் வளாக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார்.



பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்ற தொகுதியான வாரணாசியில் அமைந்துள்ள காசி விசுவநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்துக்களின் புண்ணிய ஸ்தலமாக விளங்கும் இந்தக் கோவில் அருகே ஓடும் கங்கை நதியின் படித்துறைகளில் நீராடுவதால் செய்த பாவங்கள் நீங்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் வெற்றிபெற்ற பின்னர் பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக இந்தக் கோவிலில் சுமார் 5.50 லட்சம் சதுர அடியில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றது. இவற்றில் 70 சதவீதம் பசுமை திட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இங்கு விஸ்வநாதர் கோவிலை கங்கைக்கரை உடன் நேரடியாக இணைக்கும் வகையில் 320 மீட்டர் நீளமும் 20 மீட்டர் அகலமும் கொண்ட நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பண்டை காலத்தைப் போலவே சிவபக்தர்கள் கங்கை நதியில் புனித நீராடிய பிறகு நேரடியாக காசி விஸ்வநாதரை தரிசிப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் இங்கு அருங்காட்சியகம், நூலகம், பல்நோக்கு அரங்குகள், பக்தர்கள் தங்குமிடம் உணவு கூடங்கள் என 23 புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ₹ 339 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரதமர் மோடி சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையமான 'ருத்ராக்ஷ்'ஐ திறந்து வைத்தார். இதன் மூலம் சுற்றுலா பயணிகள் மற்றும் சர்வதேச வணிகர்களை ஈர்க்கும் இடமாக வாரணாசி திகழ்ந்து வருகிறது.

சாலை உள்கட்டமைப்பை பொறுத்தவரை மொத்தம் 34 கிலோமீட்டர் நீளம் கொண்ட இரண்டு முக்கிய சாலைகளை ₹ 1,572 கோடி ரூபாய் செலவில் பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார். 16.55 கிமீ நீளமுள்ள வாரணாசி ரிங் ரோடு ₹ 759 கோடி ரூபாய் செலவிலும், 17.25 கிமீ பாபத்பூர்-வாரணாசி நான்கு வழிச்சாலை ₹ 812 கோடி ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடைபெற்று வந்த காசி விசுவநாதர் கோவில் மேம்பாட்டு பணியின்போது இந்தப்பகுதியில் மறைந்துள்ள 40க்கும் மேற்பட்ட கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கண்டுபிடிக்கப்பட்ட கோவில்கள் அனைத்தும் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டிற்கு திறக்கப்பட உள்ளன. முற்றிலும் மேம்படுத்தப்பட்ட இந்த கோவிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்துள்ளார். இதையொட்டி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கோவிலைச் சுற்றியுள்ள கட்டடங்களுக்கு வண்ண விளக்குகளால் அலங்காரமும் சாமி சன்னதிக்கு மலர்களால் அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விழாவை மேலும் சிறப்பிப்பதற்காக நாடு முழுவதிலிருந்து அந்தணர்களும் துறவிகளும் வரவழைக்கபட்டுள்ளதாகவும் மேலும் பல்வேறு கட்சித் தலைவர்கள் வாரணாசிக்கு வர இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வரணாசி ஆணையர் தீபக் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்த திறப்பு விழா நாடு முழுவதும் 51,000 இடங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News