இணையங்களை கலக்கும் தி.மு.க'வின் "சமூகநீதி வெப்சீரிஸ்" - மாதம் ஒரு அத்தியாயம் வெளியீடு

Update: 2022-03-17 09:45 GMT

தி.மு.க இதுவரை இரண்டே விஷயங்களை வைத்துத்தான் பிரதானமாக அரசியல் செய்து வந்திருக்கிறது, ஒன்று 'சமூகநீதி' மற்றொன்று 'தமிழ் புறக்கணிப்பு கோஷம்'. எப்பொழுதெல்லாம் தி.மு.க'விற்கு அரசியல் செய்ய எந்த விஷயங்களும் கிடைக்கவில்லையோ, எப்பொழுதெல்லாம் தி.மு.க'விற்கு அரசியல் ரீதியாக தொய்வு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் 'சில சமூகத்தாரை புறக்கணிக்கிறார்கள் அவர்களுக்கு ஆதரவு தி.மு.க'வே' என்ற கருத்தை சொல்வதற்காக சமூகநீதி நாடகம் நடத்தப்படுகிறது, அதேபோல் 'மத்திய அரசு இந்தியை திணிக்க பார்க்கிறது தமிழுக்கு ஆபத்து' என்று வழக்கமான திரைக்கதை டெம்ப்ளேட்'டையும் தி.மு.க விடுவதில்லை.


இந்த இரு விஷயங்களை வைத்து அரசியல் நிகழ்வை தி.மு.க நிகழ்த்தி வருவது தற்காலங்களில் நடக்கும் செயல்களை வைத்து பார்க்கும் போது அப்பட்டமாக தெளிவாகிறது. குறிப்பாக 'சமூக நீதி' இதை தி.மு.க இன்றைய ஓடிடி தளங்களில் வரும் வெப்சீரிஸ் போலவே செய்கிறது என வைத்துக்கொள்ளலாம். கடந்த நவம்பர் மாதம் அஸ்வினி என்ற நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பெண்ணை கோவிலில் சாப்பிட அனுமதிக்க வில்லை என புறக்கணித்ததாக கூறி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது.




இந்த வீடியோ வெளியான மிகச் சில தினங்களில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அந்த நரிக்குறவர் இன பெண் அஸ்வினியை அழைத்து கோவிலில் தன் அருகில் அமர்ந்து சாப்பிட வைத்தார், உடனே அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் 'உங்களை புறக்கணிக்கிறார்கள் உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்' என செய்திகளை பரப்ப முயற்சித்தனர் தி.மு.க ஆதரவு ஊடக வாசிகள்.




இது முடிந்த சில தினங்களில் குறிப்பாக தீபாவளி அன்று அந்த நரிக்குறவர் பெண் அஸ்வினி வீட்டுக்குச் சென்று சந்தித்த முதல்வர் ஸ்டாலின் அவர் வீட்டில் அமர்ந்து பேசி நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அறிவிப்பதாக தெரிவித்தார். இது நவம்பர் மாதம் நடந்த 'சமூகநீதி தொடரின்' ஒரு அத்தியாயம் ஆகும்.




 


பின்னர் அடுத்தபடியாக டிசம்பர் மாதத்தில் திருவரங்கம் கோவிலுக்குள் இஸ்லாமியர்களை அனுமதிக்கவில்லை எனக் கூறி நாட்டியக் கலைஞர் 'ஜாகீர் உசேன்' புகார் கூறினார், இது கோவில்களில் கடைபிடிக்கப்படும் மரபு. பின்னர் இதுகுறித்து சர்ச்சையானது சிறுபான்மையினரை இங்குள்ளவர்கள் மதிப்பதில்லை, எங்களை புறக்கணிக்கிறார்கள், ஆலயத்திற்குள் அனுமதிக்கவில்லை என்பது போன்ற தர்க்கங்கள் சமூக வலைதளம் மற்றும் ஊடகங்களில் திட்டமிட்டு பரப்பப்பட்டன.




உடனே அதற்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக அமைத்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு 'இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் தெரிவித்தார். பின்னர் அது நடந்து முடிந்த சில நாட்களில் அதாவது ஜனவரி மாதத்தில் தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளி களுக்கான கலை இயல் அறிவுரையாளராக ஜாகிர் உசேன் அவர்களை முதல்வர் ஸ்டாலின் நியமித்து அதற்கான ஆணையை வழங்கினார். இந்த இரு சம்பவங்களையும் இணைத்து தி.மு.க ஆதரவு சமூக வலைதள ஊடகங்கள் இன்னொரு அத்தியாயத்தை எழுதினர்.




அந்த அத்தியாயத்தின் சாரம்சமானது, "சிறுபான்மையினராக இருந்தாலும் கோவிலுக்குள் நுழைய விட வேண்டும், ஆனால் இங்கு ஒரு சாரார் உள்ளே விட மறுக்கின்றனர் பார்த்தீர்களா மக்களே! இதைத்தான் நாங்கள் தடுக்கிறோம். இதற்காகவே நாங்கள் இருக்கிறோம்" என்பதை திட்டமிட்டு தி.மு.க ஆதரவு ஊடக சக்தியால் சமூகவலைதளத்தில் கருத்துக்கள் பரப்பப்பட்டன. பின்னர் திட்டமிடப்பட்ட அந்த அத்தியாயமும் சிறப்பாக நிறைவுபெற்றது.


ஜனவரியில் ஜாகீர் உசேன் அத்தியாயம் முடிந்த அடுத்த படியாக பிப்ரவரி மாதத்தில் சென்னையை அடுத்த கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் அப்துல்கலாம் அத்தியாயம் தொடங்கியது, தனியார் யூடியூப் சேனலுக்கு ஒன்று அளித்த பேட்டி மூலம் பிரபலமானார் அப்துல் கலாம் என்ற சிறுவன். பிறகு அந்த இஸ்லாமிய சிறுவன் குடும்பத்தை வீட்டைவிட்டு காலி செய்ய சொல்வதாக வீட்டின் உரிமையாளர் மிரட்டுவதாகவும் சமூகவலைதளங்களில் செய்திகள் பரப்பப்பட்டன.




இதனையடுத்து சொல்லிவைத்தார் போலவே அந்த சிறுவனை அதே பிப்ரவரி மாதத்தில் தலைமைச் செயலகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அழைத்து பாராட்டு தெரிவித்தது மட்டுமல்லாமல் தமிழக அரசு சார்பில் வீடு ஒதுக்கியும் ஆணை பிறப்பித்தார இந்த இடத்தில் தி.மு.க'வின் ஆதரவு ஊடகங்களும் சமூக வலைதள வாசிகளும் கூறுவது அதே விஷயம்தான் "உங்களை ஒதுக்குகிறார்கள், உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்" என்ற அதே சமூகநீதி திரைக்கதையைத்தான் இந்த அத்தியாயத்திலும் பயன்படுத்தினார்கள் என்ன ஒரு வித்தியாசம் எனில் இதனை பிப்ரவரி மாத சமூகநீதி அத்தியாயத்திற்காக பயன்படுத்திக்கொண்டனர்.






 





பின்னர் மற்றுமொரு சம்பவமாக மார்ச் மாதத்தில் தி.மு.க'வின் சமூகநீதி வெப்சீரிஸ் என் அடுத்த அத்தியாயமாக நடத்தப்பட்டது. மார்ச் 12 அன்று நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் "எங்களை இந்த சமூகம் ஒதுக்கி வைக்கிறது" என்ற ரீதியிலான கருத்துக்களை முன்வைத்தார். உடனே அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களில் தமிழ் ட்விட்டர் பதிவுகளில் இருந்து சில முக்கிய ட்விட்டர் கணக்குகளால் அந்த வீடியோ பகிரப்பட்டது.




பின்னர் மார்ச் 15ஆம் தேதி அன்று தி.மு.க'வின் எம்.பி'யும், முதல்வர் ஸ்டாலின் என் தங்கையுமாகிய கனிமொழி மற்றும் தி.மு.க'வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் டி.ஆர்.பி ராஜா ஆகியோர் அந்த வீடியோவை அனுதாபங்கள் தெரிவிப்பது போல் பகிர்ந்தனர்.




அதனையடுத்து மார்ச் 16 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் ஆகியோர் அந்த சிறுமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து புகைப்படங்கள் எடுத்தும் சமூகவலைதளங்களில் 'சமூகநீதி மார்ச் மாத அத்தியாயத்திற்கு' புகைப்படங்கள் கொடுத்தனர்.




நடந்த இந்த சம்பவங்களை எல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது தி.மு.க மாதாமாதம் ஒரு சமூக நீதி அத்தியாயத்தை நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அதாவது மக்களுக்கு தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகள் நூற்றுக்கணக்கில் முடிக்கப்படாமல் உள்ளன, தமிழகத்தில் விலை வாசி ஏறும் சமயத்தில் அதுபற்றி அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று அறிக்கையும் இல்லை, விரைவில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் சமயத்தில் எத்தனை தி.மு.க'வின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்ற அறிவிப்பும் இல்லை இப்படி இருக்கையில் மாதம் ஒரு முறை சமூகநீதி என கூறிக் கொண்டு யாரையாவது ஒருவரை அழைத்து "எங்களை பின்னுக்கு தள்ளுகிறார்கள்" என பேச வைத்து பின்னர் அவர்களை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து கொண்டு வந்து "உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம்" என்பது போன்ற வழக்கமான திரைக்கதையை தி.மு.க அடுத்தடுத்து செய்து வருகிறது.


ஒன்று 'சமூகநீதி' மற்றொன்று 'தமிழ்மொழி' இது இரண்டையும் விட்டால் தி.மு.க'விற்கு அரசியல் செய்ய வேற வழி இல்லை என்றே தோன்றுகிறது.

Similar News