"தேச பக்தியுடன் தெய்வ பக்தி" - ஆர்.ஆர்.ஆர் #கதிர்பார்வை

Update: 2022-03-25 12:00 GMT

தேச பக்தியையும் தெய்வ பக்தியையும் கலந்து திரையில் படைத்து கண்களுக்கு விருந்தாக்கி உள்ளார் இயக்குனர் ராஜமௌலி.




 


ஆர்.ஆர்.ஆர் 500 கோடி ரூபாய் செலவில் பான்-இந்தியா படமாக இன்று உலகெங்கும் வெளியாகியுள்ளது. இரண்டு கொரோனா அலையின் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப் போனாலும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு இயக்குனர் ராஜமவுலி தலைமையில் படக்குழுவினர் பிரம்மாண்ட காட்சி அமைப்புகளின் மூலம் திரையை விட்டு கண் அகலாதவாறு பார்த்துக் கொள்கின்றனர்.


சுதந்திரப் போராட்ட காலத்தில் வெள்ளையர்கள் நம் மக்களை அவர்கள் விருப்பத்திற்கு எவ்வாறு அடிமைப் படுத்தினார்கள் என்பதுதான் படத்தின் மூலக்கதை. மலைவாழ் சிறுமி ஒருத்தியை வெள்ளைக்கார குடும்பம் அத்துமீறி தனது மாளிகைக்கு தூக்கி வந்து விடுகிறது, அந்த மலைவாழ் மக்களின் காவலனான 'பீம்' கதாபாத்திரம் அந்த சிறுமியை மீட்க டெல்லி வரை சென்று அதிரடியாக மீட்க திட்டமிடுகிறது. மறுபுறம் பரங்கியர்களின் காவல்துறையில் உள்ளூர ஒரு லட்சியத்துடன் 'ராம்' என்கின்ற அசாத்திய வீரன் அதிகாரியாக உள்ளார்.




அந்த சிறுமியை மீட்க வரும் 'பீம்'மை பிடிக்கும் சவாலான பணி ராமிற்கு ஒப்படைக்கப்படுகிறது, ராம் பீமனை தடுத்து சிறையில் அடைக்க பின்னர் சந்தர்ப்பவசத்தால் தப்பிக்கும் பீம் சிறுமியை மீட்டாரா? ராம் லட்சியத்தை அடைந்தாரா என்பதே படத்தின் மீதிக்கதை. ராம் கதாபாத்திரத்தில் ராம்சரண், முறுக்கேற்றிய மீசையும், இறுகிய உடம்புமாக காவல்துறை அதிகாரியாக கச்சிதமான பணியை செய்துள்ளார். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மலைவாழ் பழங்குடி காவலனாக கரடுமுரடான தோற்றத்தில், பாசம் என வந்தால் கண்களால் உருகிவிடும் நடிப்பால் ஜூனியர் என்.டி.ஆர் தெறிக்க விடுகிறார். மேலும் ராமிற்காக காத்திருக்கும் சீதா கதாபாத்திரத்தில் ஆலியா பட் பிரமாதமாக நடித்துள்ளார்.

வெள்ளையர்களின் கொடூரம், மத நம்பிக்கைகள், இறைவனை வணங்குதல், காவிக் கொடிகள், இறுதிக்காட்சியில் ராம அவதாரத்தில் வந்து வெள்ளையர்களை வீழ்த்துவது, அவருக்கு துணையாக பீமன் நிற்பது, சீதா கதாபாத்திரம் ராமனுக்காக காத்துக் கொண்டிருப்பது, இறுதியில் தேசபக்தியும், தெய்வபக்தியும் இரு கண்களாக இருக்க வேண்டும் என்ற கருத்தை உணர்த்துவது போன்ற இடங்களில் இயக்குனர் ராஜமௌலிக்கு பெரிய பாராட்டுக்கள்.




 


நூற்றுக்கணக்கில் ஆட்கள் இருக்க ஒற்றை ஆளாய் கலவரம் செய்பவனை கைது செய்து ராம்சரண் இழுத்து வரும் காட்சி, காட்டில் ரத்த வாடையை உடல் முழுவதும் பூசிக்கொண்டு புலியை ஜூனியர் என்.டி.ஆர் பிடிக்கும் காட்சி, வெள்ளையர்களின் கோட்டைக்குள் காட்டு மிருகங்களுடன் ஜூனியர் என்.டி.ஆர் தோன்றும் காட்சி, இறுதியில் சண்டைக்காட்சி என பத்து படங்களுக்கு தேவையான உழைப்பை கொட்டி கொடுத்துள்ளனர் படக்குழுவினர்.


ஒடுக்கப்பட்டவன், நசுக்கப்பட்டவன் என காழ்ப்புணர்ச்சி கதைகளை கூறி ஒரு சாராரை கதாநாயகனாக காண்பித்து மற்றொரு சாராரை வில்லனாக காண்பிக்கும் சில படங்களுக்கு மத்தியில் தேசபக்தியை உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்து தெய்வ பக்தியை மனதில் கொள்ள வேண்டும் என வகுப்பு எடுத்திருக்கும் ராஜமௌலிக்கு பெரிய பாராட்டுக்கள். அதற்கேற்றார் போல் நடித்திருக்கும் ஜூனியர் என்.டி.ஆர், மற்றும் ராம் சரணுக்கு திரையுலகம் இன்னும் பல உயரங்களை தர காத்திருக்கிறது.




மூணு மணி நேர படமாக இருந்தாலும் அந்த விறுவிறுப்பு குறையாமலும் குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய படைப்பாகவும் பத்துப் படங்களுக்கு தேவையான உழைப்பை ஒரே படத்திலும் கொடுத்திருக்கும் இயக்குனர் ராஜமௌலிக்கும், கதை ஆசிரியர் விஜயேந்திரபிரசாத்'ற்கும், சேசிங் காட்சிகள், சண்டை காட்சிகள், அரண்மனை காட்சிகள் என அணைத்து பிரம்மாண்டத்தையும் சிதறாமல் திரையில் காண்பித்த ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமாருக்கும், பழங்குடியினர் வாழும் இடம், பரங்கியர்கள் அரண்மனை, டெல்லியில் நெரிசலான இடங்கள், 1920'களின் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என அனைத்தையும் கண் முன்னே நிறுத்தியிருக்கும் கலை இயக்குநர் சாபு சிரில் அவர்களுக்கும், மூன்று மணி நேர படத்தின் எந்த ஒரு இடத்திலும் கவனத்தை திருப்பாத அளவிற்கு எடிட்டிங் செய்த ஸ்ரீகர் பிரசாத், சிறப்பான பின்னணி இசையிலும், ஆங்கிலேயன் நடனத்தை பற்றி கிண்டலாக கேட்க "நாட்டுக்கூத்து" பாடல் மூலம் திரையில் மட்டுமல்ல திரையரங்கிலும் ரசிகனை ஆடவைத்தை இசையமைப்பாளர் மரகதமணி என அனைவரின் உழைப்பையும் கதிர் குழுமம் பாராட்டுகிறது.

Similar News