'கட்சியையே மாத்துங்க, அடி மட்ட தொண்டனுக்கு பதவி குடுங்க' - பிரசாந்த் கிஷோரின் அதிரடி திட்டம், கேட்குமா காங்கிரஸ்?
நேரு குடும்பத்து கட்சியான காங்கிரஸ் கட்சியை காப்பாற்ற முக்கிய சில யோசனைகளை தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் வகுத்துள்ளார், அழியும் நிலையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் கடைசி அஸ்திரமாக பிரசாந்த் கிஷோரின் வியூகங்கள் பார்க்கப்படுகிறது அவ்வாறு இந்த திட்டங்கள் நடைபெறும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சி குறைந்தபட்சம் சில மாநிலங்களிலாவது ஆட்சியில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 70 ஆண்டு காலம் இந்தியாவை ஆண்ட கட்சி, நேரு குடும்பத்து கட்சி, சுதந்திர போராட்ட காலத்து தலைவர்களின் கட்சி, 3 பிரதம மந்திரிகளை ஒரே குடும்பத்திலிருந்து கொடுத்த கட்சி, என பெயரளவில் பல பெருமைகளை வைத்துள்ள காங்கிரஸ் கட்சி தற்போது இந்தியாவில் இரண்டு மாநிலங்களில் மட்டும் ஆட்சியில் இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. காரணம் நேரு குடும்பத்தின் வாரிசுகளை தலைமை பொறுப்பில் இருப்பதும், மாநிலங்களில் கட்சிக்குள் பல கூட்டணிகள் உருவாகி கட்சியில் ஒற்றுமை இல்லாமல் இருப்பதே காரணமாகும். இந்நிலையில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் ஒரு மாநிலத்தில் கூட காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை, இதே நிலையில் போனால் காங்கிரஸ் கட்சியிடம் எஞ்சியுள்ள ராஜஸ்தான், சட்டிஸ்கர் என இரு மாநிலங்களும் கூட கையை விட்டுப் போய்விடும் என்ற நிலைமை உருவாகியுள்ளது.
இதுமட்டுமில்லாமல் வரும் 2024 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அசுர பலத்துடன் இருக்கும் பா.ஜ.க'வை எதிர்கொள்ளத் திராணியற்று காங்கிரஸ் கட்சி நிற்கிறது, அதுமட்டுமின்றி குட்டி குட்டி மாநில கட்சிகளை நம்பி பாரம்பரிய கட்சியான காங்கிரஸ் இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் கடைசி நம்பிக்கையாக தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் சில முக்கிய தேர்தல் வியூகங்களை காங்கிரஸ் கட்சிக்கு வகுத்து கொடுத்ததாக தெரிகிறது.
அப்படி அந்த தேர்தல் வியூகங்களை காங்கிரஸ் கட்சி எந்த ஒரு கோஷ்டி பூசலும் இல்லாமல், வாரிசு பிரச்சினையும் இல்லாமல் மாநிலங்களில் உள்ள நிர்வாகிகள் ஒற்றுமையுடன் கடைபிடித்தால் மட்டுமே அழியும் நிலையிலிருக்கும் கட்சிக்கு சிறிதாவது உயிர் கிடைத்தது போல் இருக்கும் என பல அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மேலும் காங்கிரஸ் கட்சிக்கு உட்கட்சி தேர்தல் நடத்த ஏற்பாடு நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா உடன் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கடந்த மூன்று நாட்கள் தொடர ஆலோசனை நடத்தினார், அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பல காங்கிரஸ் கட்சி மீதான குற்றங்களை அடுக்கினார் குறிப்பாக 11 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்த வியூகங்கள் என்ன என்பது தற்போது வெளியாகியுள்ளது.