சுதந்திர இந்தியாவிற்கு தன் பங்களிப்பால் புரட்சி விதை விதைத்த பூலித்தேவனார் வரலாறு!
புலி தேவர் அல்லது பூலித்தேவர் தமிழகம் தந்த வீரமிகு மறவர்களில் முதன்மையானவர். அவரின் வீரமும், நெஞ்சுரமும் பல தலைமுறைகள் கடந்து இன்று படித்தாலும், தெரிந்து கொண்டாலும் அவர் தம் வரலாறை கேட்பவர்களுக்குள் வீரம் சுரக்கும்.
இந்திய சுதந்திர போரட்டத்தில் தமிழகம் வழங்கிய பங்களிப்பை யாரும் மறுக்கவும், மறைக்கவும் முடியாது. "நெற்கட்டான் செவ்வலை " தலைமையிடமாக கொண்டு ஆண்டு வந்தவர் பூலித்தேவன். இவர் வாழ்ந்த காலம் (1715 முதல் 1767 வரை). ஆங்கிலேயர்கள் இவரை ஆங்கிலத்தில் தமிழ் பொலிகர் என்று அழைப்பதுண்டு. திருநெல்வேலியை சார்ந்த தென்காசி பகுதியில் சங்கரன் கோவில் தாலுக்காவில் அமைந்திருந்தது இவரின் தலைமையிடம்.
கிழக்கு இந்தியா கம்பெனியை எதிர்த்து குரல் கொடுத்த முதல் வீரர் இவர். இன்றளவும் இந்தியாவின் முதல் விடுதலை போராக கருதப்படுவது சிப்பாய் கலகம் ஆகும். இந்த கலகத்திறும் முன்னோடியாக கருதப்படுபவர் பூலித்தேவனார். இவர் எழுப்பிய "வெள்ளையனே வெளியேறு " என்கிற முழக்கம் இந்தியாவின் சுதந்திர வரலாற்றில் பிள்ளையார் சுழியாக அமைந்தது எனலாம்.
பூலித்தேவனின் வாழ்கை என்பது அரசன் என்பதற்காக ஆடம்பரமாக இருந்ததல்ல, கரடு முரடான பாதையில், விடுதலையே வேட்கையாக நெருப்பாற்றில் நீந்தி தன் வாழ்வை கடந்தார் என்பதற்கு சான்றாக இந்த நாட்டுப்புற பாடல் வரிகளை நாம் நினைவு கூறலாம்.
"நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பெருமை என்ன?
நெருப்பாற்றைக் கடந்த பூலித்தேவனாலே "
ஆதியில் இவரின் ஊரின் பெயர் ஆவுடையாபுரம் என்றே அழைக்கப்பட்டது . ஆனால் எந்தவொரு காரணத்திற்காகவும் தன் மீது ஆதிக்கம் செலுத்தும் யாருக்கும் வரியின் பெயரால் ஒரு நெல் மணியை கூட கொடுக்கமாட்டார் என்பதால் இவரின் ஊர் பெயர் நெற்கட்டுஞ் செவ்வல் என்றானதாக சொல்லப்படுகிறது.
பூலித்தேவரின் ஆட்சி காலம் என்பது பாண்டியராட்சியின் முடிவுக்காலமாக, நாயக்கராட்சியின் சரிவு காலமாக, ஆற்காடு நவாப்பின் அத்துமீறல்களுடன், ஆங்கிலேயரின் வருகையும் சேர்ந்திருந்த மிகந்த கடுமையான காலம். பூலித்தேவர் பாளையக்காரர்களை ஒன்றிணைத்து கப்பம் கட்டுவதை தடுத்ததால் , ஆர்காடு நவாப் ஆங்கிலேயரின் உதவியை நாடினான். வரி வசூலிக்கும் பொறுப்பை அவர்கள் வசம் ஒப்படைத்தான்.