இந்திய விடுதலை போராட்ட தியாகிகளில் சிலரின் தியாகத்தை வரலாறு மறக்காது. அதிலும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த ஏராளமான வீரர்களில் இவர் பெயர் இல்லாமல் சுதந்திர வரலாற்று பக்கங்களை எழுதவே முடியாது.
திருப்பூர் குமரன் ஈரோடு அருகிலுள்ள சென்னிமலை எனும் பகுதியில் அமைந்துள்ள செ.மேலப்பாளையம் எனும் சிற்றூரில் 1904 இல் பிறந்தார். இவரின் பெற்றோர் நாச்சிமுத்து முதலியார் மற்றும் கருப்பாயி ஆவார். இவரின் இயற்பெயர் குமாரசாமி முதலியார் என்பதாகும். குடும்பத்தில் மூன்றாவதாக பிறந்த இளைய மகன் இவர். வீட்டில் நிலவிய வறுமையின் காரணமாக பள்ளி படிப்பை ஆரம்ப கல்வியோடு முடித்து கொண்டார்.
அதன் பின்பு கைத்தறி நெசவு தொழிலை செய்து வந்தார், அதன் பின் ராமாயி என்பவருடன் திருமணம் முடிந்தது . இவர் செய்து வந்த தொழிலில் இவருக்கு போதிய வருவாய் கிட்டவில்லை, எனவே வேறொரு தொழில் தேடி திருப்பூர் வந்தடைந்தார். அங்கே கவுண்டர் ஒருவர் நடத்திய மில்லில் பணிக்கு சேர்ந்து அந்த மில்லின் ஊழியராக பணியாற்றி வந்தார்.
அன்றைக்கு நிலவிய இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபாடு கொண்டும், காந்திய கொள்கைகளில் ஈர்க்கப்பட்டும், காந்தியடிகள் அறிவித்த போராட்டங்கள் அனைத்திலும் கலந்து கொண்டார். இவர் வாழ்ந்த காலத்தில் ஏராளமான சுதந்திர போராட்ட வீரர்கள் இருந்த போதும், இவரின் பெயர் தனித்து திகழ காரணமாக இருந்தது ஒரு சம்பவம்.
அதாவது 1932 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டம் அறிவிக்கப்பட்ட போது அந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைவரின் மீதும் தடியடி நடத்தியது . அந்த தடியடியால் பாதிக்கப்பட்டவரில் கொடி காத்த குமரனும் ஒருவர், அவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்த போதும் அவர் கையில் ஏந்தியிருந்த கொடியை கிழே விழாமல் காத்தார்.
அவரின் இந்த மன உறுதியில் ஆங்கிலேயர்களால் கடுமையாக தாக்கப்பட்ட போதும் அவர் அந்த கொடியை மட்டும் கீழே விடவேயில்லை. இந்த சம்பவத்திற்கு பின் மிகுந்த பாதிப்புக்குள்ளான குமரனார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அடுத்த நாள் ஜனவரி 11 இல் அவருடைய உயிர் பிரிந்தது . கொடியை காக்க துணிந்து தன் இன்னுயிரை ஈந்ததால் இன்று வரை கொடி காத்த குமரன் என்றே அழைக்கப்படுகிறார்.
அவர் மறைந்த போது அவர் இந்த தேசத்தின் சொத்து என்று அறிவித்து பல தலைவர்களும் ஒன்றிணைந்து அவர் சடலத்தை எரியூட்டினார். காந்தியடிகள் அவர் மறைந்த சில நாட்களில் அவர் குடும்பத்தை தேடி வந்து ஆறுதல் சொன்னார்.
75 ஆம் சுதந்திர ஆண்டை கொண்டாட காத்திருக்கும் இவ்வேளையில் வீடுகள் தோறும் கொடியேற்றும் தீவிரமான எண்ணத்திற்கு அன்றே விதையிட்டவர் கொடி காத்த குமரன் அவர்கள்.