இது 1973 - ல் ஏற்படுத்தப்பட்ட புலிகள் பாதுகாப்பு திட்டம் 1992 – ல் ஏற்படுத்தப்பட்ட யானைகள் பாதுகாப்பு திட்டம் உள்பட பல்வேறு முன்னெடுப்புகளுக்கு வழிவகை செய்தது. இதனால், 1973-74 ஆம் ஆண்டில் 9 ஆக இருந்த புலிகள் காப்பகம் தற்போது 53 உயர்ந்துள்ளது. இதன்மூலம், புலிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. புலிகள் எண்ணிக்கை குறித்த மத்திய அரசின் அறிக்கை ஒவ்வொரு 4 வருடத்திற்கு ஒரு முறை வெளியிடுடப்படுகிறது. அதன்படி, 2006 -ல் 1411 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018-ல் 2967 ஆக உயர்ந்துள்ளது. முக்கியமாக, புலிகள் காப்பகத்தின் கீழ் புலிகள் உட்பட பல்வேறு வகையான விலங்கினங்கள் தாவர இனங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக உள்ள பரப்பளவு மட்டும் சுமார் 18,500 ச. கி. மீ (1973-74) – ல் இருந்து 72803 ச. கி. மீ (2021-22) ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 5 புலிகள் காப்பகங்கள் உள்ளன. இதன் மொத்த பரப்பளவு 6195 ச. கி. மீ ஆகும்.
1992 – ல் யானைகள் பாதுகாப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதன நோக்கங்கள் – 1. வளர்ப்பு யானைகள் நலனை உறுதி செய்தல், 2. யானைகள், வாழ்விடம் மற்றும் வழித்தடம் ஆகியவற்றை பாதுகாத்தல், 3. மனித – யானை எதிர்கொள்ளலை தடுப்பது ஆகியவை ஆகும். இன்று நாட்டில் 32 யானைகள் பாதுகாப்பகம் உள்ளன. இதன் மொத்த பரப்பளவு 69582 ச. கி. மீ ஆகும். இதில் 25 % பரப்பளவு மட்டுமே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் உள்ளன. 2019 கணக்கீட்டின்படி நாட்டில் மொத்த யானைகளின் எண்ணிக்கை சுமார் 29964 ஆகும். மேலும் யானையை தேசிய பாரம்பரிய விலங்காக மத்திய அரசு கடந்த 2010 ஆம் ஆண்டு அறிவித்தது. மேலும், நாட்டில் 72 பறவைகள் சரணாலயமும் இதில் 1200 க்கும் அதிகமான பறவை இனங்களும் உள்ளன.
இப்படியாக, புலிகள் மற்றும் யானைகள் எண்ணிக்கைகள் காப்பகங்கள் மூலமாக கணிசமாக உயர்ந்துள்ள போதிலும் இவைகள் உட்பட பல்வேறு விலங்குகள் தாவரங்கள் உள்ளிட்ட காட்டுயிர்கள் அடங்கிய உயிர்சூழல் இயற்கையாகவும் மனித நடவடிக்கைகள் மூலமாகவும் பல்வேறுவகையான நெருக்கடிக்கு உள்ளாகின்றன. இவைகளை எப்படி ஒழுங்குபடுத்துவது என்ற கேள்வியும் நம்முன் எழுகிறது.
குறிப்பாக, புலிகள் இறப்பும் அதன் பின் உள்ள காரணங்களும். 2012–ல் இருந்து 2022 வரையிலான காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 97 புலிகள் இறந்திருக்கின்றன. இக்காலத்தில் இறந்த புலிகளின் எண்ணிக்கை 1068 ஆகும். இதன்பின், பல காரணங்கள் உள்ளன அவைகள் இயற்க்கை இறப்பு, வேட்டையாடுதல் மற்றும் இயற்க்கை இறப்பும் அல்லாத வேட்டையாடுதலும் அல்லாத காரணங்கள் ஆகும். இந்திய அளவில், 2018 - ல் வேட்டையாடுதல் மூலம் இறந்த புலிகளின் எண்ணிக்கை 34 ஆகும். இதுவே, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் வேட்டையாடுதல் மூலம் இறந்த புலிகளின் எண்ணிக்கை முறையே 17 மற்றும் 7 ஆகும். கணிசமாக குறைந்துள்ளது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.
கடந்த 10 ஆண்டுகளில் (2011 - 2020) மட்டும் 1160 யானைகள் இறந்துள்ளன அதுவும் இயற்க்கை அல்லாத காரணங்களால். அதிகபட்சமாக மின் வேலிகள் மூலமாக இறந்துள்ளன இதற்க்கு அடுத்தபடியாக புகைவண்டி தாக்கியும், வேட்டையாடுதல் முலமாகவும் மற்றும் விஷம் வைத்தும் கொல்லப்பட்டுள்ளன. இதை தடுக்க பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்தே ஆகவேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.
பாறு கழுகுகள் (பெருங்கழுகு (அ) பிணம்தின்னி) காடுகளில் இறந்த விலங்குகளை தின்று மற்ற விலங்குகளுக்கு தொற்று நோய் ஏதும் பரவாமல் காப்பதால் இதை காடுகளின் தூய்மை பணியாளன் என்று அழைகிறோம். இது 1990 - க்கு முன்பு வரை போதுமான அளவில் இருந்து காடுகளின் தூய்மையை உறுதி செய்து வந்தன. இதன்பின் இதன் எண்ணிக்கை கணிசமாக குறைய தொடங்கின உலகெங்கிலும் அதாவது கொத்துக்கொத்தாக செத்து மடிந்தன. காரணம் தேடி புறப்பட்ட அறிவியல் அறிஞர்கள் பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு கண்டுபிடித்த உண்மை வலியை மறத்துபோக செய்ய கால்நடைகளுக்கு கொடுக்கப்படும் வலி நிவாரணியான டைகுளோபினாக் என்பதாகும். டைகுளோபினாக் செலுத்தப்பட்டு பின் இறந்த கால்நடைகளை உண்டு இப்பறவைகள் இறந்துபோயின. இதன்பிறகு இதன் தடைகோரி உலகமெங்கும் எடுத்த முயர்சியின் பலனாக தற்போது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் கால்நடைகளுக்கு இந்த மருந்தை தருவதற்கு அரசுகள் தடை செய்துள்ளன என்பது மகழ்ச்சி அளித்தாலும் இதன் இருந்த எண்ணிக்கையில் ஏற்பட்ட பெரும் வீழ்ச்சியை சரி செய்ய இன்னும் காலம்பிடிக்கும். இதன் அவசியத்தை கருத்தி;ல் கொண்டு 2009 ஆம் உருவானதுதான் சர்வதேச பாறு விழிப்புணர்வு நாள் ஆகும். இது ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் முதல் சனிக்கிழமை இதற்கான விழிப்புணர்வு நாளாக அனுசரிக்கப்படுகிறது.
உலகில் 23 வகையான பாறுக்களும் இந்தியாவில் 9 வகையான பாறுக்களும் குறிப்பாக தமிழகத்தில் 6 வகையான பாறுக்களும் காணப்படுகின்றன. இதில் 4 வகையான (வெண்முதுகுப் பாறு, கருங்கழுத்துப் பாறு, மஞ்சள் முகப் பாறு மற்றும் செந்திலைப் பாறு) பாறுக்கள் இங்கேயே இருப்பவை. இரண்டு (ஊதாமுகப் பாறு மற்றும் இமாலயப் பாறு) வகையான பாறுக்கள் வலசை வருபவை ஆகும். முன்னர், பாறுக்கள் ஸ்ரீவில்லிபுத்தூர், சென்னை, தஞ்சாவூர், டாப்சிலிப், ஆனைமலை, முதுமலை, நீலகிரி, சத்தியமங்கலம், தெங்குமரகடா என பல இடங்களில் காணப்பட்ட இப்பறவை தற்போது நீலகிரி, முதுமலை குறிப்பாக தெங்குமரகடா மற்றும் சத்தியமங்கலம் வனப்பகுதியில் மட்டுமே காணப்படுகிறது. முக்கியமாக நான்கு வகையான பாறுக்களை ஓரிடத்தில் காணமுடியும் என்றால் அது தெங்குமரகடாவில் மட்டுமே.
இதுதவிர, சிலவகை அந்நிய தாவரங்கள் காடுகளுக்கு களைச்செடிகளாக இருக்கின்றன குறிப்பாக சீமை கருவேலம், உன்னிச்செடி, பார்த்தீனியம், மேலும் பல. இவைகளை முழுமையாக கட்டுப்படுத்தி அந்த இடத்தில் உள் நாட்டுத் தாவரங்கள் வளரக் கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 - 8 வரையிலான இந்த வாரம் என்பது 68 - வது தேசிய காட்டுயிர்கள் வாரம் ஆகும். இந்நாட்களில், நாம் எடுக்க வேண்டியது கீழ்காணும் உறுதிமொழியை,
வனவிலங்குப் பாதுகாப்பு உறுதிமொழி
மனித நாகரிகத்தின் அடித்தளமான இயற்கைச் சூழ்நிலையைக் காப்பதன் அடிப்படை இன்றியமையாமையை நன்கு உணர்ந்து, இன்றைய தலைமுறையினரின் நாளைய வளங்காணும் நம்பிக்கைக்குரிய, குறைந்துவரும் காட்டுப் பகுதிகளையும், மறைந்துவரும் விலங்கினங்களையும் பேணிக்காப்பதில் நான் முனைந்து பணியாற்றுவேன் என முழு மனத்தோடு உறுதி கூறுகிறேன்.
(மூலம்: இந்திய வனவிலங்குகள், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், ஜூன் 1974)