1906 ஆம் வருடம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் உள்ள காங்கேயநல்லூரில்,வீரசைவ செங்குந்த மரபில் சிவத்திரு மல்லையதாச பாகவதர் மற்றும் ஸ்ரீமதி கனகவல்லி அம்மையாருக்கும் நன்மகனாய் தோன்றினார் திருமுருக கிருபானந்த வாரியார்.
பெயருக்கேற்ப கருணையே வடிவாகி,சொற்பொழிவெனும் இன்பத்தை முத்தமிழால் வெளிப்படுத்திய பெருங்கடலாகவே இருந்தார்.
தன்னுடைய ஐந்தாவது வயதில் திருவண்ணாமலையில் உள்ள வீர சைவ பாணிபாத்திர தேவர் மடத்தில் சிவலிங்க தாரணம் செய்து வைக்கப்பட்டார்.அதே போல பிரம்மஸ்ரீ வரதாச்சாரியாரிடம் ஏறத்தாழ 4 ஆண்டுகள் வீணை கற்றுக் கொண்டார்.
பிள்ளை பிராயத்திலேயே இவருடைய தந்தையே குருவாக நின்று தமிழ் இலக்கண,இலக்கியங்களையும், ஆன்மீக புராண இதிகாசங்களையும் கற்றுக் கொடுத்தார் வாரியார் சுவாமிகளுக்கு.தேவாரம், திருப்புகழ், திருவருட்பா,கந்தரனூபதி, கந்தபுராணம்,பெரியபுராணம்,ராமாயணம்,மகாபாரதம் என அனைத்தையும் கற்றார்.
வேதாகம மரபை,வைதிக சைவ மேன்மையை கிராமங்கள்தோறும் பிரச்சாரம் செய்தவர் வாரியார் சுவாமிகள்.கோவில் திருப்பணி,அமைப்பாய் திரளுதல்,உபந்யாசம் என்று மக்களை திரட்டினார்.ஒரு சினிமா நடிகருக்கு கூடும் கூட்டத்தை விட வாரியார் சுவாமிகளுக்கு உலகெங்கும் கூடிய தமிழ்மக்களின் கூட்டம் அளப்பறியது.
மலேசியா - சிங்கப்பூர் - இலங்கை என எங்கும் தமிழ் இந்துக்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியதை வரலாறு தெளிவாக பதிவு செய்துள்ளது.எங்கே ஆன்மீக சிந்தனை அவமதிக்கப்பட்டாலும்,நமது மதம் இழிவு செய்யப்பட்டாலும் அங்கே வாரியார் சுவாமிகளின் கருத்துகள் கேடயமாக நின்றன..
சென்னை தமிழிசை மன்றத்தால் 1967 ல் இசை பேரறிஞர் விருது வாரியார் சுவாமிகளுக்கு வழங்கப்பட்டது.திருப்பணி சக்கரவர்த்தி, சொற்பொழிவு வள்ளல், சரஸ்வதி கடாக்ஷாம்ருதம், பிரவசன சாம்ராட், திருப்புகழ் ஜோதி என்றெல்லாம் பல்வேறு பெயரால் அழைக்கப்பட்டார்.