மத்திய அரசு அதிக வரி பணம் எடுத்துக்கொண்டு மாநில அரசுகளுக்கு குறைவாக ஒதுக்குகிறதா? - உண்மை என்ன ?

Update: 2022-11-17 09:58 GMT

கடந்த வாரம் நவம்பர் 10ஆம் தேதி மத்திய அரசு, மாநிலங்களுக்கு இரண்டு தவணை வரி பகிர்ந்தளிப்புகளை வெளியிட்டது. மத்திய அரசு அதிக வரி பணத்தை எடுத்துக்கொண்டு, மாநிலங்களுக்கு குறைவான வரி தொகையை திரும்ப அளிக்கிறது என்று சில கட்சிகள் வாதம் செய்தன. வரி பகிர்வு என்றால் என்ன? அதன் பின்னணி என்ன என்பதை பார்ப்போம் !

கடந்த வாரம் வியாழன் அன்று மத்திய அரசு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டிய இரு தவணை வரி பகிர்வை விடுவித்தது. மத்திய அரசு மாநிலங்களுக்கு ஒரு நிதி ஆண்டிற்கு மொத்தம் 14 தவணைகளாக வரிகளை பகிர்ந்தளிக்கும். கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு இதேபோல் இரு தவணை வரி பகிர்வுகளை விடுவித்தது. இம்முறையும் முன்பை போல் இரு தவணைகளையும் ஒரே முறை மாநிலங்களுக்கு விடுவித்துள்ளது.

வரி பகிர்வு என்றால் என்ன? வரி எப்படி பகிரப்படுகிறது?

கடந்த 1 ஜூலை, 2017ஆம் ஆண்டு, ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு, பெரும்பாலான பொருட்கள் ஜிஎஸ்டி கீழ் கொண்டுவரப்பட்டது. இதில் மூன்று பிரிவுகள் உள்ளது அதாவது மத்திய ஜிஎஸ்டி, மாநில ஜிஎஸ்டி மற்றும் மத்திய மாநில ஜிஎஸ்டி. இம்மூன்றில் மாநில ஜிஎஸ்டி நேரடியாக மாநிலங்களுக்கு சென்றுவிடும், மீதமுள்ள இரண்டும் மத்திய அரசிடம் சென்று பிறகு ஒவ்வொரு மாதமும் மத்திய அரசு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும்.

இதைத் தவிர ஜிஎஸ்டிக்குள் இல்லாத பொருட்களின் மீது விதிக்கப்படும் வரிகளை அதாவது வருமான வரி, சொத்து வரி, சுங்கம், யூனியன் கலால் வரி, சேவை வரி ஆகியவற்றை மத்திய அரசு வசூலிக்கும். இவையனைத்தையும் மொத்தமாக கணக்கிட்டு, நிதி ஆணையம் பரிந்துரைத்த சதவீத அடிப்படையில் மாநிலங்களுக்கு மத்திய அரசு பகிர்ந்தளிக்கும். இதைதான் இப்போது நடைமுறையில் கடைப்பிடிக்கப்படுகிறது.

15வது நிதி ஆணையமும்; வரி பகிர்வின் அடிப்படையும்

கடந்த 2017ஆம் ஆண்டு மத்திய அரசு ஜிஎஸ்டியை அமல்படுத்திய பிறகு நவம்பர் மாதம் 27ஆம் தேதி 15 வது நிதி ஆணையத்தை அமைத்தது. மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் 41% சதவீத வரியை மாநிலங்களுக்கு பிரித்தளிக்க 15 வது நிதி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. குறிப்பாக மாநிலங்களுக்கு நிதி பகிர ஆறு அளவுருக்கள் அடிப்படையாக கொள்ளும்.


1) மக்கள் தொகை

2) பரப்பளவு

3) அடர்ந்த காடுகளின் அளவு

4) தனிநபர் வருமானம்

5) மக்கள்தொகை செயல்திறன்

6) வரி வசூல் முயற்சி

இந்த ஆறு அளவுருக்களை அடிப்படையாகக் கொண்டு நிதியை பகிர்ந்தளிக்க மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதனால் பெரும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இதை காரணம் காட்டி வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற பொய் பிரச்சாரத்தை சிலர் துவங்கினர் அதில் திமுகவும் ஒன்று. 14வது நிதி ஆணையம் 1971 ஆம் ஆண்டு எடுத்த மக்கள்தொகை கணக்கை, 15வது நிதி ஆணையம் கணக்கில் எடுத்து கொள்ளவில்லை.

தமிழகத்திற்கு எத்தனை கோடி கிடைத்தது?

மத்திய அரசு தமிழகத்திற்கு இரு தவணைகளையும் சேர்த்து மொத்தம் 4,759 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. இந்த நிதியாண்டில், ஆகஸ்ட் மாதம் இதேபோல் இரு தவணைகளையும் சேர்த்து 1,16,665 கோடி ரூபாயை விடுவித்தது. அதில் தமிழகத்திற்கு 4,759 கோடி ரூபாய் வந்தது. ஒவ்வொரு மாதமும் ரூபாய் 47,592 கோடி மொத்தமாக மத்திய அரசு விடுவித்ததாக சிஏஜி அறிக்கை கூறியுள்ளது.

இந்த நிதி ஆண்டிற்கு தமிழகத்திற்கு மொத்தம் எவ்வளவு கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும்?

இந்தாண்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சகம் மாநிலங்களுக்கு வரி பகிர வேண்டியது மொத்தம் ரூபாய் 8,16,649.47 கோடி என தெரிவித்துள்ளது. இந்தாண்டு பகிர்ந்தளிக்கப்படும் மத்திய வரி 15வது நிதி கமிஷனின் பரிந்துரைப்படி 41% மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்திற்கு இந்நிதியாண்டில் மொத்தம் ரூபாய். 33,311.14 கோடி கொடுக்கப்படும். இதுவரை இரு முறையாக இருதவணைகள் தமிழகத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


2014க்கு முன்பும்; பின்பும்

2021-22 ஆண்டு முதல் மத்திய அரசு 15வது நிதி ஆணையம் பரிந்துரைத்த சதவீதத்தின் அடிப்படையில் வரியை பகிர்கிறது. இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால் 2014-15 ஆம் நிதி ஆண்டுவரை அதாவது பிரதமர் மோடி பதவியேற்ற நிதி ஆண்டிற்கு முன்பு வரை மொத்த வரியில் 32% சதவீதம் மற்றுமே மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. பிறகு 2015-16ஆம் நிதி ஆண்டு முதல் 14வது நிதி ஆணையம் பரிந்துரையின்படி அது 42% சதவீதமாக உயரத்தி வழங்கப்பட்டு வந்தது. பிறகு கொரோனாவிற்கு பின் 15வது நிதி ஆணையம் பரிந்துரையின்படி 41%ஆக மொத்த வரியில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் திமுகவினர் செய்யும் பிரச்சாரத்தை பொய்யென நிரூபிக்கும்.

Similar News