தமிழகத்தில் தலைவிரித்தாடும் குற்ற செயல்கள் - அதனை விட்டு சமூக வலைத்தளத்தில் விமர்சித்தவரை துரத்தும் திமுக அரசு!
தமிழகத்தில் இந்த பிப்ரவரியில் காவல்துறை நடவடிக்கை மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் வகையில் நடந்த 3 குற்ற சம்பவங்களுக்கு பதிலளிக்காத திமுக அரசு இணையத்தில் விமர்சனம் செய்த ஒருவரை ஒரே நாளில் விமானத்தில் சென்று கைது செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பிப்ரவரி மாதத்தில் முக்கிய முதல் சம்பவமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி நள்ளிரவில் 4 ஏடிஎம் மையங்களில் புகுந்த கொள்ளையர்கள் ரூ. 72,50,000 ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். அவர்கள் வந்த வாகனத்தின் காட்சிகள் சிசிடிவி கேமராவில் சிக்கிய நிலையில், கொள்ளையை அரங்கேற்றுவதற்கு முன்பு, கொள்ளையர்கள் ஏ.டி.எம். மையங்களை நோட்டமிட்ட காட்சிகளும் போலீசாருக்கு கிடைத்தன. மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் 6 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் ஏடிஎம் தொழில்நுட்பம் தெரிந்த கும்பலே இந்த கொள்ளையை நிகழ்த்தியிருப்பதாகவும் போலீசாருக்கு தெரியவந்தது. இப்படி வெளிமாநில கும்பல் திட்டமிட்டு தமிழகத்தின் கிராம பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடித்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கழித்தே காவல்துறை குற்றவாளிகளை நெருங்க முடிந்தது.
பிப்ரவரி மாதத்தில் மற்றொரு அதிர்ச்சி சம்பவமாக, பிப்ரவரி 12ம் தேதி சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் 2 மாடிகள் கொண்ட வீட்டின் 2-வது தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ஜெயச்சந்திரன் இவர் அதே முதல் தளத்தில் ‘ஜே.எல்.கோல்டு பேலஸ்’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கடையின் ஷட்டரை துளையிட்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள், நகை பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த சுமார் 9 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.20 லட்சம் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து இதுநாள் வரை கொள்ளையர்கள் கைது செய்யப்படவில்லை சம்பவம் நடந்து 15 நாட்களாகிறது.
மேலும் பிப்ரவரி மாதத்தின் மற்றொரு அதிர்ச்சி சம்பவமாக கோவை நீதிமன்ற வளாகத்திற்கு வாய்தாக்காக இரண்டு பேர் வெட்டப்பட்ட சம்பவம் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கோவை நீதிமன்ற வளாகத்தின் பின்புறம் நுழைவாயில் அருகே திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கொண்ட நடுரோட்டில் இருவரையும் ஓட ஓட சரமாரியாக வெட்டியதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து சாவகாசமாக தப்பித்து சென்ற காட்சி இணையத்தை உலுக்கியது.