பீகாரில் நடக்கும் அமலாக்கத்துறை வேட்டையால் பீதியில் ஆ.ராசா, கனிமொழி - பரபர பின்னணி!

Update: 2023-03-14 11:29 GMT

அமலாக்கத்துறை தற்பொழுது பீகாரில் நடத்தி வரும் அதிரடி வேட்டையினால் தமிழகத்தில் ஆராசா மற்றும் கனிமொழி சத்தம் இல்லாமல் ஒதுங்கி விட்டனர்.

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை திமுக காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தேசிய அரசியலில் பெரிதாக வெடித்தது, தமிழக அரசியல் மட்டுமல்லாமல் இந்திய அரசியலில் காங்கிரஸ் ஆட்சி மாறுவதற்கு காரணமாக இருந்தது இந்த 2 ஜி ஊழல் விவகாரம். காங்கிரஸ் தலையெழுத்தை மாற்றிய 2ஜி விவகாரத்தில் இன்னமும் அமலாக்கத்துறை, சி.பி.ஐ விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த பிறகும் இதனை இதில் உள்ள குற்றத்தை நாங்கள் கண்டிப்பாக நிரூபிப்போம் என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் அதிரடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்த போது ரயில்வேயில் வேலை வாங்கி தருவதற்காக வேலை பெற்றவர்கள் தங்களின் நிலங்களை பரிசாக அல்லது குறைந்த விலைக்கு, லாலுவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பினாமிகளின் பெயர்களுக்கு எழுதித் தந்திருப்பதாகவும், இதன்மூலம் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த வழக்கில் நிலமோசடி தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பாட்னா மற்றும் டெல்லியில் உள்ள லாலு பிரசாத் யாதவின் வீடு உள்ளிட்ட 24 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் லாலு பிரசாத் யாதவின் மகள்கள் மற்றும் மகன் தேஜஸ்வி யாதவின் டெல்லி வீட்டிலும் இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையில், ரூ. 70 லட்சம் ரொக்கம், 540 கிராம் தங்க கட்டிகள், 1.5 கிலோ தங்க நகைகள் மற்றும் 900 அமெரிக்க டாலர்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியது.

இப்படி 2004 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கோடிகளை குவித்த அதுவும் 700 கோடி ரூபாய் அளவிற்கு குவித்த லாலு பிரசாத் யதாவுக்கே இந்த நிலைமை என்றால் ஆயிரக்கணக்கான கோடிகளை குவித்த 2 ஜி வழக்கில் கனிமொழி மற்றும் ஆ.ராசா மீது எந்த அளவிற்கு நடவடிக்கை பாயும் என இப்பொழுதே அரசியல் ரீதியாக கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

மேலும் நீலகிரி தொகுதி திமுக எம்.பி ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, 2015-ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து, டெல்லி, சென்னை, கோவை,திருச்சி, பெரம்பலூரில் ஆ.ராசாவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை அடிப்படையில் ஆ.ராசா, அவரது மனைவி பரமேஸ்வரி, உறவினர் பரமேஸ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, என்.ரமேஷ், விஜய்சடரங்கனி, கோவை ஷெல்டர்ஸ் புரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், மங்கள் டெக் பார்க் லிமிடெட் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

7 ஆண்டுகள் நடந்த விசாரணைக்குப் பிறகு, ஆ.ராசா, சி.கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் புரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், மங்கள் டெக் பார்க் லிமிடெட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி ஆகியோர் மீது கடந்த மாதம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட காலத்தில் வருமானத்தைவிட 579 சதவீதம் அதிகமாக ரூ.5.53 கோடி அளவுக்கு ஆ.ராசா சொத்து குவிப்பில் ஈடுபட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் சிபிஐ தெரிவித்திருந்தது.

இந்த வழக்கு, சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது. இப்படி அமலாக்கத்துறை நடத்திவரும் ரைடு பிற மாநிலங்களில் தீவிரமாக நடந்து வரும் நிலையில் அடுத்த படியாக கனிமொழி ஆ.ராசா மீதான வழக்குகள் இன்னும் வேகம் எடுக்கும் என தெரிகிறது.

Similar News