அண்ணாமலை ஏவிய சொத்து பட்டியல் அஸ்திரம் - ஆட்டம் கண்டு ஒரே நாளில் பல்டியடித்த திருமாவளவன்!
அண்ணாமலை அரசியல் தலைவர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டது தமிழக அரசியலை புரட்டிப் போட்டுள்ளது.
திமுக தலைவர்களின் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து பட்டியலை வெளியிட்டதன் மூலம் தமிழக அரசியலில் பல அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டார் அண்ணாமலை. அந்த அதிர்வலைகள் அடங்கும் முன் அடுத்த அதிரடியாக, 'வியாழன் அல்லது வெள்ளி, சி.பி.ஐ-யிடமிருந்து அப்பாயின்மென்ட் இந்த சொத்து பட்டியல் எல்லாத்தையும் புகார் கொடுக்கணும். புகார், கோப்புகள் (Document) எல்லாம் ரெடியா இருக்கு. இந்த வாரமே கொடுத்துட்டு வந்துடலாம்னு இருக்கேன். ஊழல் செய்த பணத்தை தி.மு.க வக்கீலுக்குக் கொடுக்க நினைத்தால், நிச்சயமாக வழக்கு தொடுக்கட்டும். ஏன்னா சாராயத்தில் கொள்ளையடித்த பணத்தை எதுலயாவது செலவு பண்ணிதான் ஆகணும். நீதிமன்றம் இருக்கு, மக்கள் மன்றம் இருக்கு, அதைப் பற்றி பயமில்லை' என்று அண்ணாமலை கூறியது வேறு லட்சக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்த பல அரசியல் தலைவர்களை மேலும் பயப்பட வைத்துவிட்டது.
இந்த நிலையில் அண்ணாமலை சொத்து பட்டியல் வெளியிட்டதன் காரணமாக தமிழக அரசியல் தலைவர்கள் தற்போது மாறி மாறி பேச துவங்கி உள்ளனர். குறிப்பாக கூற வேண்டும் என்றால் அண்ணாமலை திமுக தலைவர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டது முதல் படிதான் என்றும் அடுத்தபடியாக விசாரணைகள் துவங்கும் எனவும் அண்ணாமலையே அறிவித்துள்ளார். மேலும் வரும் வாரங்களில் இதனை சி.பி.ஐ வசம் எடுத்துச் செல்ல இருக்கிறார் அண்ணாமலை, இப்படி அண்ணாமலை சொத்து பட்டியல் வெளியிட்டதன் காரணமாக பல்வேறு குழப்பங்கள் தமிழக அரசியலில் நிலவி வருகிறது. இத்தனை ஆண்டு காலம் மக்கள் சேவை! அனைவருக்குமான அரசியல்! சமூக நீதி! நாங்கள் அடித்தட்டு மக்களுக்கானவர்! நாங்கள் தான் தமிழகத்தில் சிற்பி! என்றெல்லாம் கூறி அரசியல் செய்து வந்தவர்கள் இத்தனை லட்சம் கோடி சொத்துக்கள் சேர்த்து வைத்திருக்கிறார்களா? அப்பொழுது இவர்கள் செய்தது அரசியல் இல்லை, இவர்கள் செய்தது வியாபாரம் என மக்கள் மத்தியில் பேச துவங்கி விட்டனர்.
இப்படிப்பட்ட மாற்றத்தை தமிழக அரசியலில் ஒரே நாளில் கொண்டு வந்த காரணத்தினால் அண்ணாமலை மீது மக்களுக்கு மதிப்பு உயர்ந்துள்ளது, அது மட்டுமல்லாமல் அண்ணாமலையை பற்றி பேசவே தற்பொழுது பல தலைவர்கள் பயந்து வருகின்றனர். இந்த நிலையில் திருமாவளவன் வேறு 'பாஜக பகை கட்சி கிடையாது' என பல்டி அடித்துள்ளார்.
நேற்று சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திருமாவளவன் கலந்து கொண்டார், அந்த நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசுகையில், “மனித குலத்தின் பகை தனி நபர்கள் கிடையாது. பா.ஜ.க. ஒரு பகை கட்சி கிடையாது' என பாஜக பகையே கிடையாது எனக்கூறியது விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இப்படி அண்ணாமலை சொத்து பட்டியல் வெளியிட்ட சமயத்தில் எங்கே தன்னுடைய அரசியல் விவகாரங்களையும் அண்ணாமலை வெளியிட்டு விடுவாரோ என திருமாவளவன் தரப்பு பயந்து இருப்பதாக தெரிகிறது. அதன் காரணமாகத்தான் பாஜக பகை கட்சி கிடையாது, எங்களுக்கு பாஜக மீது கோபம் கிடையாது என இத்தனை நாள் வரை பாஜகவை எதிர்த்து அனைத்து மேடைகளில் முழங்கி வந்த திருமாவளவன் தற்போது பல்டி அடிக்கும் விதமாக ஒரே நாளில் 'பாஜக எங்களுக்கு பகை கட்சி கிடையாது' என பம்மிக்கொண்டு பேசினார் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.