அமைச்சர் பதவிக்கு ராசியில்லாத தொகுதியா ஆவடி?

Update: 2023-05-13 05:30 GMT

அமைச்சர் பதவிக்கு சென்டிமென்டாக சரியில்லாத தொகுதியா ஆவடி?

திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்ற தொகுதியாக உள்ள ஆவடி தொகுதி கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலில் தொகுதி மறு சீரமைப்பில் புதிதாக உருவாக்கப்பட்டது. இதன் தொகுதி எண் 6. தமிழ்நாடு மாநிலத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றான இந்த தொகுதி திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

தஞ்சை பெரிய கோவிலுக்குள் சென்றால் பதவியோ இல்லை, உயிரோ பறிபோகிவிடும் என பல ஆண்டுகளாக அரசியல் பிரமுகர்களுக்கு இடையே இருக்கும் ஒரு சென்டிமென்ட் போல, இந்த ஆவடி தொகுதியில் வெற்றி பெற்றால் அமைச்சரவை பதவி பறிபோகி விடும் என்ற ஒரு சென்டிமென்ட்டும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஆவடி தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகி இருக்கும் நாசரும், அவரது ஆதரவாளர்களும் ஆவடி செண்டிமெண்ட்டை கூறி தங்களுக்கு தானே ஆதரவு கூறி வருகின்றனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் ஆவடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாஃபா பாண்டியராஜனை அன்றைய அதிமுக தலைவர் ஜெயலலிதா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆக்கினார். ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு விதியின் விளையாட்டால் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பதவியை பரிதாபமாக பறிகொடுத்த மாஃபா பாண்டியராஜன், ஓ பன்னீர்செல்வம் முகாமிலிருந்து, 2017ல் நிகழ்ந்த ஓபிஎஸ் இபிஎஸ் இணைப்பில் மீண்டும் அமைச்சர் பதவி தேடி வந்தது. அந்த சமயம் மாஃபா பாண்டியராஜனுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பதவியை கொடுத்தார் எடப்பாடி பழனிச்சாமி.

இதே போல இப்போது ஆவடி தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகி இருக்கும் நாசருக்கு அவர் வகித்த பால்வளத்துறை அமைச்சர் பதவி பறிபோகியுள்ளது. இந்த நிலையில மே 10 பத்தாம் தேதி காலை கூட்டம் கூட்டமாக ஆவடியில் உள்ள நாசர் வீட்டிற்கு படையெடுத்த அவரது ஆதரவாளர்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட திமுக நிர்வாகிகளும், ஆவடி தொகுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பதவி பாதியிலே பறி போனாலும் மீண்டும் அந்த பதவி அவர்களைத் தேடி வரும் என அந்த தொகுதியின் சென்டிமென்டை கூறி தங்களுக்கு தாங்களே ஆறுதல் சொல்லிக் கொண்டனர். அதிமுக ஆட்சியில் ஆவடி தொகுதியில் வெற்றி பெற்ற மாஃபா பாண்டியராஜனிடம் பதவி பறிக்கப்பட்டு மீண்டும் கொடுக்கப்பட்டதை போல இன்னும் ஓராண்டில் மீண்டும் நாசர் அமைச்சரவையில் இடம் பிடிப்பார் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றன. அது மட்டும் இல்லாமல் நாசருக்கு வரும் காலத்தில் முக்கிய இலாக்காக்கள் கொடுக்கப்படாவிட்டாலும் ஏதேனும் ஒரு துறையை முதல்வர் ஒதுக்குவார் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

இவ்வாறு ஆவடி தொகுதியில் வெற்றி பெற்றால் அமைச்சர் பதவியில் நிலைக்க முடியாது என்ற சென்டிமென்ட் பரவி வரும் நிலையில், பிற்காலத்தில் அனைத்து கட்சியினரும் ஆவடி தொகுதியில் நின்று வெற்றி பெற தயங்குவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதுமட்டுமல்லாமல் நான் இன்னும் சில நாட்களில் மீண்டும் இழந்த அமைச்சர் பதவியை மீண்டும் பெறுவேன் என தனது ஆதரவாளர்கள் மத்தியில் கூறி இரண்டு தினங்களாக தேற்றி வருகிறார் அமைச்சர் நாசர்.

Similar News