இத்தகைய குழப்பமான தரவுகளின் அடிப்படையில், கிறிஸ்தவர்களின் மீதான 'வன்முறை அட்டூழியங்கள்' எண்ணிக்கையை கிட்டத்தட்ட 3 கோடி அளவிற்கு காட்டியுள்ளனர்.!!! எப்படி?
'FIOCANA வின் 2022 அறிக்கைக்கான தரவுகள் இரண்டு மூலங்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. EFI-RLC யின் அறிக்கை (287) & சாட்சி மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் அறிக்கைகள் (120). ஆனால் இதை உறுதிப்படுத்த EFI யிடம் எந்த குறிப்புகளும் (references) இல்லை. ஆதாரங்களில்லாத EFIயின் இந்த அறிக்கையை தான் Persecution.Org அல்லது International Christian Concern (ICC) போன்ற அமைப்புகள் பயன்படுத்துகின்றன. மேற்கண்ட அமைப்புகளை மறுபடியும் ஆதாரமாக FIOCONA குறிப்பிடுகிறது.!' என்று OSINT ட்விட்டர் கணக்கு குறிப்பிடுகிறது.
இதை மத சுதந்திர அறிக்கை முழுவதும் காண முடிகிறது. நான்கு கிறிஸ்துவ எவாஞ்சலிஸ்ட் அமைப்புகள் (Evangelical Fellowship of India, International Christian Concern, Open Doors USA, and FIACONA ) தங்களையே மாற்றி மாற்றி ஆதாரமாக காட்டி கொள்கின்றன. இதை அடிப்படையாகக் கொண்டு, அமெரிக்க வெளியுறவுத் துறை தன்னுடைய அறிக்கையைத் தயாரித்துள்ளது.
பலமுறை தரவுகள் நகலெடுக்கப்பட்டது (data duplication) போல் மறுபடியும், மறுபடியும் வருகின்றன. பாதிப்புகளை மிகைப்படுத்திக் காட்ட இம்முறை கையாளப்பட்டுள்ளதாக DisInfoLab குறிப்பிடுகிறது. இத்தகைய முறை அதிக பட்சமாக உ.பி. மற்றும் சட்டிஸ்கர் மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சட்டிஸ்கரில் ஒரே வழக்கு 7, 8 முறை மீண்டும் வருகிறது. உ.பி யில் மட்டுமே 50 முறைக்கும் மேல் வருகிறது.!
குடும்பங்களுக்கிடையே நடக்கும் பிரச்சனைகள், மோசமான வழிகளில் நடக்கும் மதமாற்றங்ளின் மீது மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகள், எவாஞ்சலிஸ்ட் கும்பல்களின் ஆக்கிரமிப்புகள் மீதான வழக்குகளெல்லாம் கிறிஸ்தவர்களின் மீதான 'அட்டூழியங்களாக' பதிவு செய்யப்பட்டுள்ளது.
'ஒரு பாதிரியாரை கைது செய்வது ஒரு 'அட்டூழியம்', அதே பாதிரியாரை விடுதலை செய்யும் செய்தி மற்றொரு 'அட்டூழியம்'' என இவ்வறிக்கையின் திரிக்கப்பட்ட தரவுகளை வெளிக் கொண்டுவருகிறது DisInfoLab. தங்களின் மதமாற்று செயல்களை தடுக்கும் / எதிர்க்கும் எல்லா நடவடிக்கைகளும் 'அட்டூழியங்களாகவே' கருதப்பட வேண்டும் என FIOCONA வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
2020ல் நடைபெற்ற ஒரு வெபினாரில் இதே அமைப்பு இந்தியாவில் அதிகரித்து வரும் மதமாற்றங்களைக் குறித்து தம்பட்டம் அடித்துக் கொண்டது. அதே மூச்சில் இந்தியாவை கருப்புப்பட்டியலில் (blacklisted) இடம் பெற செய்ய வேண்டும் என வலியுறுத்தியது.
இப்படி திரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், இந்தியாவின் மத சுதந்திரம் பெருமளவு குறைந்து விட்டதாகவும், இது அமெரிக்கப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை (?!) ஏற்படுத்தும் எனவும் FIOCANA முடிவுக்கு வந்துள்ளது.
இந்தியன் அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில் (IMAC) போன்ற இஸ்லாமிய அமைப்புகளுடன் நெருக்கமான தொடர்புடைய 'ஓப்பன் டோர்' (Open Door) என்ற ஒரு கிறிஸ்தவ அமைப்பும் இத்தகைய திரிக்கப்பட்ட தரவுகளை அளிக்கும் மற்றொரு அமைப்பாக உள்ளது.
இந்த அமைப்பு, கிறிஸ்தவர்களை அதிகமாக 'துன்புறுத்தலுக்கு' உள்ளாக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவை பட்டியலிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் (IMAC) ஜமாத் இ இஸ்லாமி என்ற அமைப்புடன் தொடர்புடையது. இந்த அமைப்பு அமெரிக்காவில் உள்ள பல்வேறு குழுக்களுடன் இணைந்து செயல்பட்டு, ஏன் பணம் அளித்தும், இந்தியாவை சர்வதேச மத சுதந்திர அமைப்பின் (USCIRF) கருப்பு பட்டியலில் இடம் பெறச் செய்ய முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் நிறுவனர் ஷைக் உபைத் மற்றும் உறுப்பினர் அப்துல் மாலிக் முஜெயத் Islamic Circle Of North America (ICNA) என்ற அமைப்பின் தலைவராகவும் இருந்தனர். இந்த அமைப்பு பாகிஸ்தானை சேர்ந்த ஜமாத்- இ - இஸ்லாமி என்ற அமைப்பின் அமெரிக்க முகமாகும்.
DisInfoLab வெளியிட்டுள்ள கருத்துக்களின் படி ICNA, பாகிஸ்தானை அடித்தளமாக கொண்ட லக்ஷர்-இ-தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுடன் ஏற்கனவே தொடர்பை வலுப்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை எண்ணிக்கைக்கும், பட்டியலில் இடம்பெற்றுள்ள தரவரிசைக்கும் இடையே ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளன எனவும் DisInfoLab வெளிக்காட்டியுள்ளது. குறைந்தபட்ச வன்முறை விகிதமுள்ள பல நாடுகள் தரவரிசை பட்டியலில் முன்னிலையிலும், அதிகபட்ச எண்ணிக்கை கொண்ட சில நாடுகள் தரவரிசை பட்டியலில் பின்னணியிலும் இடம் பெற்றுள்ளதை இந்த கணக்கு குறிப்பிட்டு காட்டுகிறது.
Evangalical fellowship of India என்ற மற்றொரு அமைப்பு இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையை குறித்து தவறாக வழிநடத்தும் தரவுகளை வெளியிடுவதில் முன்னிலையில் உள்ளது. இவ்வமைப்பு வெளியிட்டுள்ள எந்த அறிக்கையிலும் அதற்கான ஆதாரங்களோ (sources) குறிப்புகளோ (references) இல்லை.
சமீபத்தில் இத்தகைய அமைப்புகள் சார்பாக, 'இந்தியாவில் கிறிஸ்தவர்களின் மீது அதிகரித்து வரும் அட்டூழியங்கள்' என்ற பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால் இப்படி திரிக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு போடப்பட்ட பொதுநல மனுவை ஏன் அவர்களை கண்டிக்கவோ அல்லது அபராதம் விதிக்கவோ இல்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.
அமெரிக்காவை அடித்தளமாகக் கொண்ட கிறிஸ்தவ அமைப்புகளும் அதனுடன் தொடர்புடைய இந்திய அமைப்புகளும் ஜோடிக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு அறிக்கையை தயாரிக்கின்றன. இதை மீடியா நிறுவனங்கள் கிறிஸ்தவர்கள் மீதான அட்டூழியங்களாக செய்தி கட்டுரைகளாக வெளியிடுகின்றன. இதே செய்திகளை அமெரிக்காவின் மத சுதந்திரத்தை கண்காணிக்கும் அமைப்பு இந்தியாவை குறி வைப்பதற்காக பயன்படுத்துகிறது.
இந்த அறிக்கையை குறித்து சிறிதும் ஆராய்ச்சி செய்யாமல் நம் நாட்டில் உள்ள செய்தி நிறுவனங்களும் இதை அப்படியே வெளியிடுகின்றன. கடந்த இருபது ஆண்டுகளாக USCIRF அமைப்பு இந்தியாவில் மத சுதந்திரம் இல்லை எனவும், இனப்படுகொலையின் விளிம்பில் இருப்பதாகவும் கூச்சலிட்டு வருகின்றது.
இந்தியாவின் மீது உலகிற்கு தவறான கண்ணோட்டத்தை உருவாக்குவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இவ்வமைப்புகள் செயல்பட்டு வருவதை இக்கட்டுரை தெளிவாக காட்டுகிறது.