தி.மு.க ஆதரவாளரேயே கோபப்படுத்திய மின் வெட்டு!

Update: 2023-06-27 03:34 GMT

தமிழ் சினிமாவின் ஐகானிக் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம். இவர் சமீபத்தில் 'ஓ காதல் கண்மணியே' மற்றும் 'ரெமோ' படத்தில் பணிபுரிந்திருந்தார். பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளராக இருந்து வரும் பி.சி.ஸ்ரீராம் எப்பொழுதும் சமூக வலைதளங்களில் சற்று ஆக்டிவாக தான் இருப்பார்.

இந்திய திரைப்பட சிறந்த ஒளிப்பதிவாளராக இருந்த பி.சி.ஸ்ரீராம், சமீப காலமாக இவருடைய ட்விட்டர் பதிவுகளில் பிரதமர் மோடி அவர்களை விமர்சித்தும், பாஜக அரசை விமர்சித்தும் அவ்வப்பொழுது காரசார பதிவுகளை சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுவார். குறிப்பாக இவர் மோடி எதிர்பாளராகவும், மறைமுக திமுக ஆதரவாளராகவும் தான் இருந்து வந்தார். இதற்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டாக சமீபத்தில் தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று குறிப்பிடாமல் தமிழகம் என்று குறிப்பிடுவதே சரியாக இருக்கும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருந்தார்.


இதற்கு கருத்து தெரிவித்த பி.சி.ஸ்ரீராம் தன்னுடைய பதிவில், "ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல்வாதிபோல நடந்து கொள்கிறார். இந்த தேர்தலில் அவருடைய எஜமானர்கள் எப்படியாவது வெற்றி பெற வேண்டும். அதனால் அவரை பயம் பற்றிக் கொண்டிருக்கிறது. தற்போதைய யுத்தம் என்பது பிரிவினை வாதத்திற்கும், வெறுப்புப் பேச்சிற்கும் எதிரானது. ஆளுநர் பதவி விலக வேண்டும். அவரின் பேச்சு அரசியல் உள்நோக்கம் கொண்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது 70 ஆண்டுகால பொது வாழ்க்கை பயணங்களைத் தமிழ்நாடு முழுவதும் புகைப்பட கண்காட்சியாக வைக்கப்பட்டு இருந்தது. இதில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை"என்ற புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இக்காட்சியைப் பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் பார்வையிட்டார்.


அப்பொழுது அவர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறுகையில், "தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருப்பது தனக்குப் பெருமையாக இருக்கிறது. முதல் தடவையாக முதலமைச்சரின் புகைப்படங்களைப் பார்த்துப் பெருமைப்படுகிற தருணமாக இது அமைந்துள்ளது. நம்மைச் சுற்றி அனைத்தும் ஆரோக்கியமாக இருப்பதற்குக் காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் திமுக ஆதரவாளராக இருந்து வந்த பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமே தற்பொழுது கோபப்பட்டு ஆளும் கட்சியின் அரசை கேள்வி கேட்கும் மின்வெட்டு அவரை படுத்தியுள்ளது. அவரது குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பான பதிவு ஒன்றையும் பதிவிட்டு சென்னையில் ஏற்படும் மின்தடையால் கடும் கோபம் அடைந்து இருக்கிறார்.


சென்னையில் பெரும்பாலான இடங்களில் அடிக்கடி மின்வெட்டு பிரச்சினை ஏற்படுவதாக தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. இந்நிலையில், பி.சி.ஸ்ரீராம் தங்கள் பகுதிகளாக சாந்தோம் மற்றும் ஆழ்வார்பேட்டை பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. என்ன நடக்கிறது..?என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டேக் செய்து போஸ்ட் ஒன்றைய பதிவிட்டிருந்தார்.

இந்த ஒரு செய்தி தான் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பேசப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மின்வெட்டு தங்கள் பகுதிகளில் அடிக்கடி ஏற்படுவதாக ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் பதிவிட்டவுடன் அதற்கு மின்சார துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஓடி வந்து பதில் அளித்து இருக்கிறார். அதில், மின்வெட்டு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி சரி செய்ய அறிவுறுத்தியுள்ளேன். சென்னை முழுவதும் பணிகள் நடந்து வருவதால் மின் விநியோகத்தில் சிறிய இடையூறு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த பொழுது ஏற்பட்ட பிரச்சனை தற்பொழுது தங்கம் தென்னரசு மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் பொழுதும் தொடர்கிறது என மக்கள் கூறி வருகின்றனர். இப்படி அமைச்சர்கள் மாறிய பிறகும் மின்வெட்டு என்பது பெரும் பிரச்சனையாக இருந்து வருவது திமுக ஆதரவாளர்களை கோபப்படுத்தி இருக்கிறது. அதிலும் குறிப்பாக திமுக ஆதரவாளரான பி.சி.ஸ்ரீராமையே திமுக ஆட்சியில் ஏற்பட்ட மின்வெட்டு கோபப்படுத்தியது சமூக வலைத்தளத்தில் வைரலாக உலா வருகிறது.

Tags:    

Similar News