மக்களே பா.ஜ.கவின் பக்கம் தான்.. எதிர்க்கட்சியின் கூட்டணி கனவு நிச்சயம் பலிக்காது.. பிரதமர் உறுதி..

Update: 2023-07-26 04:43 GMT

2024ம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தலுக்கு பல்வேறு கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். பாஜக தரப்பில் பல்வேறு சிறப்பான ஏற்பாடுகளும் மேலும் இந்த முறை கண்டிப்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மீண்டும் மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக ஆக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிரம் காட்டுகிறது. பாஜக ஒரு பக்கம் இதற்கு தீவிரம் காட்டி, NDA என்ற பெயரில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து சிறப்பாக செயலாற்றி வரும் சூழ்நிலையில், மற்றொரு பக்கத்தில் எதிர்க்கட்சிகளும் தங்களுடைய கூட்டத்தினை ஆங்காங்கே கூட்டி பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று ஒரு நினைப்பில் பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்.


எதிர்கட்சிகளின் முதல் கூட்டம் கடந்த மாதம் பாட்னாவில் நடந்த நிலையில் கடந்த வாரம் பெங்களூரில் 2-வது கூட்டம் நடந்தது. 26 கட்சிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் 2024 மக்களவை தேர்தலுக்கான வியூகம் வகுக்கப்பட்டது. மேலும் இந்த கூட்டணிக்கு இந்தியா என்று பெயெரிடப்பட்டது. அதாவது Indian National Developmental Inclusive Alliance இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி என்பதன் சுருக்கமே இந்தியா ஆகும்.


மக்களவையின் மழைக்கால கூட்டத் தொடருக்கான வியூகத்தை வகுப்பதற்காக பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தை நடத்தியது. பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ரயில்வே அமைச்சர் அஸ்வனி வைஷனாவ் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் தான் எதிர்க்கட்சியின் கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பலமாக எதிர்த்து இருக்கிறார்.

இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், நாட்டின் பெயரை சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது என்று எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியாவை விமர்சனம் செய்தார். அதுமட்டுமில்லாத எதிர்க்கட்சிகளை "திசையற்றவர்கள்" என்று விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி கூட்டணியின் புதிய பெயரையும் கேலி செய்தார்.


மேலும் இது தொடர்பாக பாஜக நாடாளுமன்றக் கட்சியின் வாராந்திர கூட்டத்தில் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை விமர்சித்ததாக அக்கட்சியின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்தியா என்ற தங்களுடைய கூட்டணி பெயரை வைத்ததற்காக தங்களை தாங்களே புகழ்ந்து கொள்கிறது.

"இந்திய தேசிய காங்கிரஸ். கிழக்கிந்திய நிறுவனம், இந்தியன் முஜாஹிதீன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, இவையும் இந்தியா தான். இந்தியா என்ற பெயரைப் பயன்படுத்துவதால் ஒன்றும் அர்த்தமில்லை" என்று பிரதமர் கூறியதாக ரவிசங்கர் பிரசாத் கூறினார். மேலும் நாட்டின் பெயரை மட்டும் பயன்படுத்தி மக்களை தவறாக வழிநடத்த முடியாது என்றும் பிரதமர் மோடி கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.


எதிர்க்கட்சிகள் மோடியை(என்னை) எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஒன்று கூடி இருக்கிறார்கள். அவர்களுடைய கனவு நிச்சயம் பலிக்காது, மக்கள் பாஜகவின் பக்கம் தான் நிற்கிறார்கள். இந்தியாவின் பெயரை வைத்தால் தாங்கள் மிகவும் நல்லவர்கள், தங்களுடைய கூட்டணி கட்சி மிகவும் நல்லது என்றும் மக்கள் தவறாக எண்ணிவிட மாட்டார்கள். மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். 2024 தேர்தலில் மக்கள் ஆதரவுடன் பாஜக எளிதாக வெற்றி பெறும் என்றும் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

Tags:    

Similar News