"பாரதம்" எழுச்சியால் பாதாளம் போகும் "இண்டியா" கூட்டணி: வரலாற்றை விழுங்கிய காங்கிரஸ் பின்னணி ஓர் அலசல்!
ஜி20 மாநாட்டையொட்டி விருந்தினர்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழில் "பாரத குடியரசுத் தலைவர்" என்று அச்சிடப்பட்டிருப்பது விவாதப்பொருளாகி இருக்கிறது. "இந்தியா" என்பது "பாரதம்" என்று மாற்றப்பட்டது பலருக்கும் எதிர்பாராத அதிர்ச்சியை கொடுத்துள்ளது. காங்கிரஸ் தலைமையில் பாஜகவுக்கு எதிராக கிளம்பியுள்ள எதிர்கட்சி கூட்டணிக்கு இந்தியாவின் பெயரை மையமாக வைத்து, "இண்டியா" என பெயரிட்டனர். இந்த நேரத்தில் இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றப்படுவதாக வெளியான தகவல் எதிர்கட்சிகளுக்கு தூக்கிவாரிப்போட்டுள்ளது.
அரசியலமைப்பில் சொன்னபடி தான் இருக்கு
"பாரத்" என்ற சொல் அரசியலமைப்பிலும் உள்ளது. "இந்தியா, அதாவது பாரத், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்" என்று இந்திய அரசியலமைப்பின் பிரிவு 1இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் சாசனத்தின் முதல் வரியிலேயே "இந்தியா என்கிற பாரதம்" என்று தான் இருக்கிறது. வருங்காலத்தில், ஆங்கிலேயர்கள் வழங்கிய "இந்தியா" என்கிற பெயர் மாற்றப்படலாம் என்பதை இது மறைமுகமாக உணர்த்துகிறது. இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர் வருகைக்கு பின்னர் தான் பிரபலம் அடைந்தது. ஹிந்துஸ்தான், சிந்து என்கிற பெயர்கள் எல்லாம் ஆங்கிலேயர்கள், இஸ்லாமிய படையெடுப்புக்கு பிறகு புகுத்தப்பட்டவை. பாரதம் என்ற பெயரே முன்பு இருந்து நிலைந்துள்ளது. அகண்ட பாரதம் என்ற இலக்கை நோக்கி இப்போது பாஜகவின் பயணம் தொடர்கிறது.
பாஜக மாற்றுகிறது என்பதாலேயே எதிர்ப்பு
இப்போது இந்தியாவின் பெயரை மாற்ற என்ன அவசியம்? இது காலம் காலமாக இருந்து வரும் பண்பை அழிக்கும். மக்கள் மனதில் பதிந்துள்ள பெயரை மாற்றுவது நியாயமா என ஒரு சிலர் எதிர்க்கின்றனர். "மதராஸ் மாகாணம்" இருந்த தமிழகத்தின் பெயர் "தமிழ்நாடு" என மாற்றப்பட்டுள்ளது. "மெட்ராஸ்" சென்னை ஆனது. அப்போதெல்லாம் எந்த எதிர்வினையும் இல்லையே. ஏன் என்றால், பெயர் மாற்றம் நடந்த போது திமுக ஆட்சியில் இருந்தது. அவர்கள் கொள்கை, கோட்பாடு, அரசியல் தேவைகளுக்கு ஏற்ப பெயர் மாற்றம் செய்துகொண்டனர். ஆனால் பாஜக அரசு இப்போது செய்யப்போகும் மாற்றம் இந்திய அரசியலமைப்பில் சொன்ன படியே நடக்கப்போகிறது. இருந்தும் பாஜக அரசு நாட்டின் பெயரை மாற்றம் செய்கிறது என்பதே, எதிர்கட்சிகளுக்கு சோகத்தை தந்துள்ளது.