தி.மு.க. வின்‌ உண்மை முகம் - திருநீறு தரிப்பதை கிண்டல் செய்தவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு!

Update: 2021-03-22 05:03 GMT

திமுகவின் முன்னாள் இந்நாள் மற்றும் வருங்கால தலைவர்களின் இந்து விரோத போக்கு நாம் நன்கு அறிந்ததே. ராமர் எந்த இன்ஜினீயரிங் காலேஜில் படித்தார் என்ற கருணாநிதியில் தொடங்கி, இந்து திருமண சடங்கில் கூறப்படும் மந்திரங்கள் கேவலமானவை என்று கூறிய ஸ்டாலின் மற்றும் பிள்ளையாரை வெறும் களிமண் என்ற உதயநிதி வரை அனைவரும் கடவுள் மறுப்பு என்ற பெயரில் இந்து மதத்தை மட்டும் தொடர்ந்து இழிவுபடுத்தி வந்துள்ளனர்.

எனவே இவர்கள் இந்துக்களின் சமய அடையாளங்களான பட்டை நாமம் உள்ளிட்டவற்றை அணிவதை கிண்டல் செய்யும் புராணங்களில் கூறப்பட்டுள்ள சம்பவங்களை திரித்து கூறும் அதீத இந்து வெறுப்பு கொண்ட ஒரு நபருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்ததில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் மருத்துவர் எழிலன் என்பவருக்கு திமுக போட்டியிட வாய்ப்பு அளித்திருக்கிறது. இவர் திக மற்றும் திமுகவின் இந்து எதிர்ப்பு கலாச்சாரத்தின் தீவிர ஆதரவாளராக தெரிகிறார். ஒரு நிகழ்ச்சியில் அதுவும் குழந்தைகள் முன்பு "நாரதர் அழகிய பெண்களுடன் உடலுறவு கொள்ள" ஆசைப்பட்டதாகவும், அவர் ஒவ்வொரு வீடாக அழகிய பெண்ணை தேடி சென்றபோது எல்லா வீடுகளிலும் நாராயணனே அந்தப் பெண்களின் மடியில் படுத்துக் கொண்டு இருந்ததாகவும் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளார்.

மேலும் இதைக் கண்டு மலைத்துப் போன நாரதர் தானே ஒரு பெண்ணாக மாறி நாராயணனைப் புணர்ந்ததாகவும் அவ்வாறு பிறந்த குழந்தைகள் சித்திரை, விசித்திரை என்றும் பேசியுள்ளார். இப்படி ஒரு கேவலமான பின்னணி கொண்ட சித்திரையை தமிழ் புத்தாண்டாக கொண்டாடலாமா என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.

இந்துக்கள் மட்டுமே கொண்டாடும் தமிழ் புத்தாண்டை எந்தவிதத்திலும் மதத்துடன் தொடர்பில்லாத ஒரு நிகழ்வாக மாற்றும் திக, திமுகவின் முயற்சியின் ஒரு பகுதியாகவே இது தெரிகிறது. கருணாநிதி தனது ஆட்சி காலத்தில் சித்திரை 1 தமிழ் புத்தாண்டு அல்ல என்றும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட வேண்டுமென்றும் அரசாணை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இது தை முதல் நாளன்று கொண்டாடப்படும் இந்து பண்டிகையான பொங்கலை மறக்கடிப்பதற்கும், சித்திரை முதல் நாளை இந்துக்கள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவதை மாற்றுவதற்கும் எடுக்கப்பட்ட முயற்சியாகவே பார்க்கப்பட்டது. தற்போதும் 2021 சட்டசபை தேர்தலுக்காக வெளியிடப்பட்ட அறிக்கையில் திமுக "பொங்கல் பண்பாட்டு நாளாக அறிவிக்கப்படும்" என்று உறுதி அளித்துள்ளது குறிப்பிடப்பட்டது.

திமுக கூட்டணியில் உள்ள விசிக கட்சியின் நாகப்பட்டினம் தொகுதி வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் இந்துக்கள் பொங்கல் பண்டிகையின் போது சூரியனையும் பூமியையும் வழிபடுவது இஸ்லாமியர்களுக்கும் பிற மதத்தவர்களுக்கும் சங்கடமாக இருக்கிறது என்றும், இத்தகைய மதச்சடங்குகளை ஒதுக்கிவிட்டு தமிழர் திருநாளாக பொங்கலைக் கொண்டாட வேண்டும் என்றும் பேசிய வீடியோ சில மாதங்களுக்கு முன்பு வைரலானது நினைவுகூரத்தக்கது.

எனவே எப்படி பார்த்தாலும் இந்துக்களின் பண்டிகைகளை அழித்து அவற்றுக்கு மதச்சார்பற்ற தமிழர் சாயம் பூசும் முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளதையும் அதை நனவாக்கும் வகையில் ஒன்றுமறியாத குழந்தைகளிடம் இவ்வளவு ஆபாசமாக பேசி மருத்துவர் எழிலன் இந்து மதம் குறித்து தவறான எண்ணத்தை ஏற்படுத்த முயன்றதாகவே தெரிகிறது.

இது மட்டுமல்ல மற்றொரு நிகழ்ச்சியில் மருத்துவர் எழிலன் இந்துக்கள் பட்டை, நாமம் போடுவதைப் பற்றியும் நக்கலடித்து பேசியுள்ளார். இயற்பியல், கணிதம் படித்துவிட்டு சிலர் பட்டையை போட்டு கொள்வதாகவும், அதனால் என்ன நன்மை ஏற்படுகிறது என்று சிந்தித்துப் பார்ப்பது இல்லை என்றும், இதைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது என்றும் பேசியுள்ளார். அதே நிகழ்வில் பெண்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதை பற்றி ஒரு "கல்லிடம்" போய் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கிறார்கள் என்று இழிவாக பேசியிருக்கிறார்.

இது மட்டுமல்ல திராவிட நாடு வேண்டும் என்றும் பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு செல்லக்கூடாது என்றும் கூறிய பெரியார் ஈ.வெ. ராமசாமியின் வழியில் மருத்துவர் எழிலனும் பெரியாரது சுயமரியாதை இயக்கத்தை போன்று தமிழகத்தில் ஒரு இயக்கம் தோன்ற வேண்டுமென்றால் அதற்கு அவர்கள் தூண்டப்பட வேண்டும் என்றும் அவ்வாறு தூண்டப்பட்டு ஒரு புரட்சி ஏற்பட்டால் பின்னாளில் United States of India அல்லது Republic of South India என்று ஒன்று உருவாகலாம் என்றும் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் வண்ணம் பேசியுள்ளார்.

இவ்வாறு ஒரு மதத்தினரின் நம்பிக்கைகளை மதிக்காமல் தொடர்ந்து இழிவுபடுத்தி பேசியும் இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை குலைக்கும் வண்ணம் பிரிவினைவாத கருத்துக்களை பேசியும் வரும் இவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அனைத்து மக்களையும் சரிசமமாக நடத்துவாரா என்றும், தன்னிடம் இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி இந்திய அரசுக்கு எதிராக எதுவும் செய்ய மாட்டார் என்ற நிச்சயம் இருக்கிறதா என்றும் பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

ஒருபுறம் திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல என்று கூறிக்கொண்டு கையில் வேல் பிடித்து தேர்தல் நாடகம் ஆடி வரும் திமுக மறுபுறம் இப்படிப்பட்ட இந்து விரோத, பிரிவினைவாத இயல்பு கொண்ட ஒருவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது திமுகவின் உண்மையான முகத்தை தோலுரித்துக் காட்டி விட்டது என்பதே நிதர்சனம்.

Tags:    

Similar News