தி.மு.க-வின் நில அபகரிப்பு வரலாறு - ஒரு பார்வை!

Update: 2021-04-06 01:00 GMT

கர்மவீரர் காமராஜர் போன்றவர்கள் ஆட்சி செய்த தமிழகத்தில் ஊழல், ஏமாற்று வேலை, அராஜகம் போன்ற சம்பவங்கள் நிகழ பல காரணங்கள் உண்டு. 28 ஊழல்கள் செய்து 'விஞ்ஞான முறையில் ஊழல் செய்யும் கட்சி' என்று பெயரெடுத்த தி.மு.க அரசுப் பணத்தைக் கொள்ளையடிப்பது மட்டுமல்லாமல் மக்களின் சொத்தையும் அடித்துப் பிடுங்கும்‌ கலாச்சாரத்தை பரவலாக்கியது என்ற விமர்சனத்தை பிற கட்சிகள் முன்வைக்கின்றன. 2011 தேர்தலில் தி.மு.க தோற்க மின்வெட்டு முதல் காரணம் என்றால் நில அபகரிப்பு இரண்டாவது முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.

எந்த அளவுக்கு மக்கள் தி.மு.க-வினரின் நில அபகரிப்பால் பாதிக்கப்பட்டார்கள் என்றால், அடுத்த அரசு ஆட்சி அமைத்த போது இதற்கென்றே காவல் துறையில் ஒரு‌ தனிப் பிரிவை ஏற்படுத்தியது. ஆம்! சட்டத்துக்கு புறம்பாக அபகரிக்கப்பட்ட அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு மீட்டு தருவதற்காகவே சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்தின் தலைமை காவல் நிலையத்திலும் இன்று வரை இயங்கி வருகிறது.

இந்தப் பிரிவு தொடங்கப்பட்டது ஒரு சில மாதங்களிலேயே தி.மு.க-வின் முக்கிய தலைவர்களும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர் மீதும் ஏன் தற்போதைய தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி உட்பட பலர் மீதும் 300 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தான் இவ்வளவு. ஆனால் தனிப்பிரிவுக்கு வந்த புகார்கள் 20,000ஐயும் தாண்டின என்று கூறப்படுகிறது.

புகார்களை‌ பதிவு செய்ததோடு நில்லாமல் வீரபாண்டி ஆறுமுகம், கே.என்.நேரு, பொன்முடி, என்.கே.கே.பி ராஜா, கே.பி.பி சாமி, பொங்கலூர் பழனிசாமி உள்ளிட்டோரை கைது செய்து சிறையிலும் அடைத்தது காவல்துறை. இதில் கொலை மிரட்டல் விடுப்பது, வீட்டுக்கு ரவுடிகளை அனுப்பி அச்சுறுத்தி ஆவணத்தில் கையெழுத்து வாங்குவது போன்று குற்றப்பின்னணி கொண்ட வழக்குகளை மட்டுமே காவல்துறை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் "ஆதிதிராவிடர்கள் நீதிபதிகள் ஆனது திராவிட இயக்கம் போட்ட பிச்சை" என்று பேசி அதற்காக கைதும் செய்யப்பட்ட ஆர்.எஸ் பாரதி தலைமையிலான தி.மு.க-வின் வழக்கறிஞர்கள் பிரிவு தி.மு.க-வினர் மீது போடப்பட்ட வழக்குகளில் வாதாடியது. அப்போதே வலிமையான வழக்கறிஞர் பிரிவை உருவாக்கி விட்ட தி.மு.க அவர்களின் உதவியோடு இன்று வரை ஆட்சியில் இல்லாத போதும் நில அபகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறது என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு கூட திண்டுக்கல்லில் பழனி நகர தி.மு.க செயலாளர் நிலத்தை ஆக்கிரமித்ததோடு அதை தட்டிக்கேட்ட நிலத்தின் உரிமையாளரை பெண்ணென்றும் பாராமல் தாக்கியதாக செய்தி வெளியானது. தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் நில அபகரிப்பு செய்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. சில மாதங்களுக்கு முன்பு போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை அபகரித்ததாக திமுக பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதே சமயத்தில் மற்றொருவர் கைதும் செய்யப்பட்டார். நெல்லை திமுக எம்பி மீதும் நில அபகரிப்பு புகார் மீதான விசாரணை நடந்து வருகிறது.

ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக அமைந்த நில அபகரிப்பு குற்றச்சாட்டு, தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி அலுவலகத்தின் கட்டிடமே பட்டியல் இனத்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தில் அமைந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு தான். எனினும் இதை மறுத்து வரும் தி.மு.க இந்த குற்றச்சாட்டு பொய் என்று நிரூபிக்க மூலப்பத்திரத்தை இன்னும் காட்டவே இல்லை என்ற விமர்சனம் இருக்கிறது.

Tags:    

Similar News