மோடி அரசின் 100 நாள் சாதனைகள்.. மருத்துவக் கல்லூரிகள் 98% அதிகரிப்பு..

Update: 2024-09-22 17:33 GMT

மத்திய அரசின் முதல் 100 நாள் சாதனைகள் குறித்து புதுதில்லியில் செய்தியாளர்களிடம் விளக்கிய சுகாதாரம், குடும்ப நலம் மற்றும் ரசாயன, உரங்கள் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும் 100 நாட்களில் சுமார் 15 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றார். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையிலும் ஏராளமான முன் முயற்சிகள் தொடங்கப்பட்டிருப்பதாக கூறிய அவர், இதன் மூலம் சுகாதார சேவை மேம்படுவதோடு இந்தியா முழுவதும் தரமான சேவைகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்டம்:

ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்டத்தில், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவரும் அவர்களது வருவாயை கணக்கில் கொள்ளாமல் சேர்த்து கொள்ளப்படுவார்கள் என அண்மையில் அறிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய நட்டா இதன் மூலம் 4.5 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 6 கோடி பேர் பயனடைவார்கள் என்றார். ஆயுஷ்மான் பாரத் திட்டம் அரசு நிதியுதவி அளிக்கும் உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு திட்டமாக உள்ளது என்றும், விரிவாக்கப்பட்ட இத்திட்டம் அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்தார்.


யு-வின் இணையதளம்:

யு-வின் இணையதளம் சுகாதாரத்துறையின் மற்றொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்பதோடு, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பிறந்த குழந்தை முதல் 17 வயது வரையிலானவர்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி குறித்த ஆவணங்களை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதற்காக உருவாக்கப்பட்டதாகும். புதிய காசநோய் சிகிச்சை & இந்தியாவில் உருவான நோய் கண்டறிதல் முறை, தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், சுருக்கமான மற்றும் செயல்பாடு மிகுந்த சிகிச்சை முறை தற்போது பயன்பாட்டிற்கு கொண்டுவரப் பட்டுள்ளது. இதன்படி, முன்பு 9 முதல் 12 மாதங்கள் வரை அளிக்கப்பட்ட சிகிச்சை தற்போது 6 மாதங்களிலேயே அளிக்கப்படுகிறது.

ட்ரோன் பயன்பாடு:

மலைப்பிரதேசங்கள் மற்றும் தொலைதூரப்பகுதிகளில் உள்ளவர்களுக்கு மருந்துப் பொருட்களை குறைந்த விலையில் பாதுகாப்பாகவும், விரைவாகவும் கொண்டு சேர்க்க ட்ரோன்கள் சேவை பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகள், ட்ரோன் சேவையை பயன்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ளதாக திரு ஜெ பி நட்டா தெரிவித்தார். இதன் மூலம் மருந்து, மாத்திரைகள், தடுப்பூசிகள், ரத்தம், பரிசோதனைக்கான மாதிரிகள் மற்றும் உயிர்காக்கும் பொருட்களை, எளிதில் செய்ய முடியாத பகுதிகளுக்கு ட்ரோன்கள் பத்திரமாகவும், நம்பத் தகுந்த முறையிலும் கொண்டு சேர்ப்பதாக அவர் கூறினார்.


மருத்துவ கல்லூரிகள் அதிகரிப்பு:

நாட்டில் 2013-14-ல் 387 மருத்துவக்கல்லூரிகள் மட்டுமே இருந்த நிலையில், 2024-25-ல் இந்த எண்ணிக்கை 98% அதிகரித்து 766 கல்லூரிகள் உள்ளதாக அவர் கூறினார். இந்த கால கட்டத்தில் 379 புதிய மருத்துவகல்லூரிகள் தோற்றுவிக்கப்பட்டு மொத்தம் 423 அரசு மருத்துவ கல்லூரிகளும், 343 தனியார் கல்லூரிகளும் தற்போது இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எம்.பி.பி.எஸ் இடங்கள் அதிகரிப்பு:

2013-14-ல் 51,348 எம்பிபிஎஸ் இடங்கள் மட்டுமே இருந்த நிலையில் புதிதாக 64,464 இடங்கள் அதிகரிக்கப்பட்டு, 2024-25-ல் 1,15,812 இடங்கள் உள்ளதாகவும் ஜெ பி நட்டா கூறினார்.

முதுநிலை மருத்துவ இடங்கள் அதிகரிப்பு:

2013-14-ல் 31,185 முதுநிலை மருத்துவ இடங்கள் மட்டுமே இருந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் கூடுதலாக 39,460 இடங்கள் உருவாக்கப்பட்டு 2024-25-ல் 73,111 இடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News