திருவண்ணாமலை மாவட்டம் இளையாங்கன்னி பகுதியில்அரசு நிலத்தை ஆக்கிரமித்து அதில் சர்ச் கட்டியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இங்கு இருக்கும் மலை முழுவதும் கிறிஸ்துவ மிஷனரிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் இளையாங்கன்னியில் 4,500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 160 ஏக்கர் நிலப்பரப்பில் 150 அடி உயரமுள்ள மலைக் குன்று ஒன்று உள்ளது. வருவாய்த் துறை பதிவேட்டில் கல்லாங்குத்து என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1961வது ஆண்டுக்கு முன்னர் முதலில் இந்த மலை மீது ஒரு சிலுவையை நட்ட கிறிஸ்தவ மிஷனரிகள் பின்பு மலையில் இருந்த இரண்டு ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கார்மேல் மலை மாதா கோவில் என்ற சர்சை 1982ஆம் ஆண்டு கட்டியுள்ளனர். பின்னர் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களை மூளை சலவை செய்து கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்துள்ளனர்.
2014ஆம் ஆண்டு இந்த மலை மாதா சர்ச்சுக்கு செல்வதற்கு செங்கம் தொகுதியை சேர்ந்த திமுக எம்எல்ஏ ரவி என்பவர் ரூ.30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைப்பதற்கான பணிக்கு அடிக்கல் நாட்டினார். இதன் காரணமாக மலை மீது உள்ள ஐந்து ஏக்கர் நிலம் பார்க்கிங் வசதிக்காக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தார் சாலை அமைப்பதற்கு மலை குன்று குடையப்பட்டுள்ளது. இந்த சர்ச் வேலூர் மறைமாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் கீழ் இயங்கி வருகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் 19ஆம் தேதி மரம் நடும் விழாவிற்காக அப்பகுதியைச் சேர்ந்த கலெக்டர் முருகேசன் மலைக்கு சென்று உள்ளார். அப்போது மலை மீது சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பு சமன் செய்யப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு வருவாய்த் துறைக்கு உத்தரவிட்டார். வருவாய்த் துறை நடத்திய விசாரணையில் கிறிஸ்தவ மிஷனரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ள அந்த நிலப்பரப்பு அரசு ஆவணத்தில் கல்லாங்குத்து என்று குறிப்பிட்டுள்ளதாகவும் அரசுக்கு சொந்தமான இந்த இடத்தில் யாருக்கும் பட்டா வழங்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.