பிரதமர் மோடி கையில் செல்லப்போகும் சோழ சாம்ராஜ்யத்தின் செங்கோல் இவ்வளவு சிறப்புவாய்ந்ததா?

Update: 2023-05-24 14:23 GMT

ஆங்கிலேயர்களிடமிருந்து ஆட்சியும் அதிகாரமும் இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட போது அங்கே பெருமைமிகு அடையாளமாக செங்கோல் விளங்கியது. ஆங்கிலேயர்கள் பிடியிலிருந்த இந்தியா சுதந்திர காற்றை சுவாசிக்கும் வேளையில், அடிமை விலங்கு அகன்று சுதந்திரம் கிடைத்ததன் அடையாளமாக, ஆங்கிலேயர்கள் செங்கோலை ஜவஹர்லால் நேரு வசம் கொடுத்தனர்.

மன்னர் ஆட்சி காலம் தொடங்கி, முடியாட்சி வரையில் எங்கெல்லாம் ஒரு ஆட்சி மாற்றம் காண்கிறதோ அங்கெல்லாம் கம்பீரத்தின் அடையாளமாக திகழ்ந்தது செங்கோல். பல்வேரு பெருமைகள் தாங்கிய சிறப்புமிகு செங்கோல், இனி புதிய பாராளுமன்றத்திலும் இடம்பெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் அமைந்துள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தை வரும் மே மாதம் 28 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இது குறித்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,

“ஆங்கிலேயர்களிடமிருந்த ஆட்சி, அதிகாரம் இந்தியர்களுக்கு கை மாறியதன் அடையாளமாக அன்று செங்கோல் வழங்கப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குறியீடான விளங்கும் இந்த செங்கோல் சோழ சாம்ராஜ்ஜியத்தை சேர்ந்த்து. வரலாற்றின் பெரும் புகழ் மிக்க செங்கோல் புதிய பாராளுமன்றத்தில் வைக்கப்படும்” என்றார்.

புதிய பாராளுமன்றத்தை அலங்கரிக்கவிருக்கும் இந்த செங்கோல் எங்கிருந்தது? எப்படி வந்தது? விவரிக்கிறது இந்த கட்டுரை.

செங்கோல் என்பதே தூய தமிழ் சொல். வளமையை, செழுமையை குறிக்கும் ஒரு சொல். ஜவஹர்லால் நேருவின் கரங்களுக்கு வந்து சேர்ந்த செங்கோல் குறித்து சொல்லப்படும் தகவல் யாதெனில், ஆகஸ்ட் 14, 1945 அன்று இரவு 10.45 மணியளவில் தமிழக மக்களிடமிருந்து ஜவஹர்லால் நேரு இந்த செங்கோலை பெற்றுக்கொண்டார். ஆங்கிலேயர்கள் வசமிருந்த ஆட்சி இனி இந்திய மக்களை சென்றடைகிறது என்ற மகத்தான பிரகடனத்தின் அடையாளமாக இந்த செங்கோல் அன்ற விளங்கியது

ஆங்கிலேயர்கள் தங்கள் வசமிருந்த ஆட்சியை இனி இந்தியர்களிடம் ஒப்படைப்பது என்ற முடிவினை எடுத்தபின் மவுண்பேட்டன் அவர்கள் ஜவஹர்லால் நேருவிடம் ஆட்சி மாற்றத்தை குறிக்கும் ஒரு கலாச்சார குறியீடை சொல்லுங்கள் என்று கேட்டாராம். இது குறித்து நேருவும் சரியான முடிவெடுக்க முடியாத காரணத்தால், அவர் சி.ராஜகோபாலாச்சாரியுடன் கலந்து ஆலோசித்தார். அவர் பல்வேறு வரலாற்று புத்தகத்தை படித்து அறிந்த பின் ஜவஹர்லால் நேருவிடம் செங்கோல் குறித்து தெரிவித்தார்.

சோழர்களின் செங்கோலானது ரத்தினங்கள் பதிக்கப்பட்டது. அந்த செங்கோலின் அன்றைய மதிப்பு ரூ.15,000. மேலும் அந்த செங்கோலின் முகப்பில் சிவபெருமானின் வாகனமான நந்தி இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு. நந்தி பகவான் நீதியின் பாதுகாவலர், அவர் பாதுகாப்பின் குறியீடு. 5 அடி நீளம் கொண்ட அந்த செங்கோல், இந்திய கலையின் உச்சமாக திகழ்கிறது. அதன் ஆதி முதல் அந்தம் வரை கலைநயத்தால் வடிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, திருவாடுதுறை மடத்தின் ஆதீனம் ஶ்ரீலஶ்ரீ அம்பலவாண தேசிக ஸ்வாமிகள் அந்த செங்கோலை நேருவுக்கு அனுப்பினார். அதை நேரு ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக ஏற்றார். இந்த பெருமை மிகு செங்கோலானது அன்றைய நாளில் தமிழகத்திலிருந்து இந்திய அரசாங்கம் ஏற்பாட்டில் சிறப்பு விமானத்தில் அனுப்பப்பட்டது என்பது கூடுதல் தகவல்.

சிறப்பு விமானத்தில் தலைநகரம் வந்து சேர்ந்த செங்கோலை லார்ட் மவுண்ட் பேட்டன் கையில் ஒப்படைத்தார் ஶ்ரீலஶ்ரீ குமாரசாமி தம்பிரான். பின்பு முறைப்படி இந்தியர்களிடம் ஒப்படைத்தார் பிரிட்டிஷ் வைசிராய். செங்கோலுக்கு செய்யப்பட வேண்டிய சடங்குகள் அனைத்தும் ஶ்ரீலஶ்ரீ குமாரசாமி தம்பிரான் அவர்களால் செய்யப்பட்டு பின்பு அந்த செங்கோல், தமிழகத்தின் ஆதீன வித்வான் ஆன திரு. ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் நாதஸ்வரம் வாசிக்க, அரசியலமைப்பு அரங்கத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

சோழர்களின் செங்கோல் ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக அலங்கரித்த அன்றைய வரலாற்றை உலக ஊடகங்கள் அனைத்தும் பிரசூரித்தன. டைம்ஸ் இதழ் இது தொடர்பான பல்வேறு புகைப்படங்களை பிரசூரித்துள்ளது. ஆனால் இத்தனை பெருமை தாங்கிய செங்கோல் ஆகஸ்ட் 1948க்கு பின் மக்களின் பார்வையிலிருந்து மறைந்து விட்டது. மக்கள் மறந்தும் விட்டனர்.

இந்த நிகழ்வு நடைபெற்று 31 ஆண்டுகளுக்கு பின் சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவருடைய சீடரான டாக்டர். பி.ஆர். சுப்ரமணியம் அவர்களுக்கு இந்த செங்கோல் குறித்து தெரிவித்தார். அதனை தொடர்ந்து அவர் புத்தகமும் எழுதியுள்ளார். இது தொடர்பான தகவல்களை தமிழக அரசும் குறிப்பிட்டுள்ளது.

எனவே இத்தனை பெருமை வாய்ந்த செங்கோலை அருங்காட்சியகத்தில் வைப்பது அதற்கு பெருமை சேர்ப்பதாக இருக்காது என கருதி, அதன் கம்பீரத்திற்கு நிகரான பாரளுமன்றத்தை இனி அந்த செங்கோல் அலங்கரிக்கும், என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மேலும் வரும் மே 28 புதிய பாராளுமன்ற திறப்பு விழாவின் போது, பிரதமர் மோடி தமிழகத்தின் செங்கோலை ஏற்றுக்கொண்டு அதை சபா நாயகரின் இருக்கை அருகே நிறுவுவார்.

இந்திய பாரம்பரியத்துடன் தொடர்புடைய ஓர் அரிய மற்றும் அதீத முக்கியத்துவம் வாய்ந்த தருணமாக இது அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

Similar News