இந்திய ஜனநாயகத்தின் இருண்ட தினத்தை நினைவு கூர்ந்த தலைவர்கள்...1975 அவசரநிலை!
இந்திய அரசியலமைப்பின் கரும்புள்ளி:
இந்தியாவில் அவசரநிலை பிரகடனத்தின் 50 வது ஆண்டு நிறைவை பாஜக தலைவர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் எண்ணங்களை பதிவிட்டுள்ளனர். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று புதிய பார்லிமென்ட் கட்டிடத்தின் வெளியே பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், "நாளை ஜூன் 25, 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில், அரசியலமைப்பின் மீது ஒரு கரும்புள்ளி போடப்பட்டது. அத்தகைய கறை நாட்டிற்கு வராமல் இருக்க முயற்சிப்போம். ஜனநாயகத்தை நசுக்கி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை முற்றிலுமாக நிராகரித்து, நாடு சிறைச்சாலையாக மாற்றப்பட்ட நாளை இந்தியாவின் புதிய தலைமுறை மறக்காது " என்று கூறினார்.
ஜே.பி.நட்டா:
இதனை அடுத்து, இன்று மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, ஜூன் 25, 1975- காங்கிரஸ் கட்சியின் அரசியல் உந்துதல் மூலம் அவசர நிலையை அமல்படுத்தும் முடிவு நமது ஜனநாயகத்தின் தூண்களையே உலுக்கி, டாக்டர் அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்பை மிதிக்க முயன்ற நாள். அந்த காலகட்டத்தில், இன்று இந்திய ஜனநாயகத்தின் காவலர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் அரசியலமைப்பை பாதுகாப்பதற்காக எழுப்பப்படும் குரல்களை நசுக்கி, பாதுகாக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இருண்ட நாளான இன்று அவசரநிலையின் போது ஜனநாயகத்தின் பாதுகாப்பாளர்களாக துணிச்சலுடன் நின்ற நமது மாவீரர்களின் தியாகங்களை நாம் சிந்திக்கிறோம். எமர்ஜென்சியை எதிர்த்துப் போராடி, ஜனநாயகத்தைக் காக்கப் பாடுபட்ட அந்த பாரம்பரியத்தைச் சேர்ந்தது எங்கள் கட்சி என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமித்ஷா:
நாட்டில் ஜனநாயகத்தை கொலை செய்ததிலும், பலமுறை தாக்கியதிலும் காங்கிரஸ் கட்சிக்கு நீண்ட வரலாறு உண்டு. 1975ல் இதே நாளில் காங்கிரஸ் விதித்த எமர்ஜென்சி இதற்கு மிகப்பெரிய உதாரணம். திமிர்பிடித்த காங்கிரஸ் அரசாங்கம், ஆட்சியில் இருக்கும் ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக 21 மாதங்களுக்கு நாட்டில் உள்ள அனைத்து சிவில் உரிமைகளையும் ரத்து செய்தது. அன்று இக்காலங்களில் ஊடகங்கள் மீது தணிக்கை விதித்து, அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்து, நீதிமன்றத்தின் கைகளைக் கூட கட்டிப்போட்டார்கள். எமர்ஜென்சிக்கு எதிராக நாடாளுமன்றம் முதல் வீதிகள் வரை போராடிய எண்ணற்ற சத்தியாக்கிரகிகள், சமூக சேவகர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆகியோரின் போராட்டத்திற்கு நான் தலை வணங்குகிறேன் என்று தனது சமூக வலைதள பக்கத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.