விவசாயிகளின் அதிருப்தியை சம்பாதித்த திமுக - 2 லட்சம் பேரின் கதி என்ன? வாய் திறக்காத முதல்வர்!
காவிரி நீரை பெறுவதற்கு தமிழக அரசு தொடர்ந்து கர்நாடகாவிடம் போராடி வருகிறது. காவிரி நதிநீர் ஒதுக்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி கர்நாடகா தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்கவில்லை. 2023ல் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவாக உள்ளதால் கர்நாடக அணைகள் நிரம்பவில்லை. எனவே, தமிழகத்துக்கு முழுவதுமாக தண்ணீர் திறந்து விட முடியவில்லை என கர்நாடக அரசு விளக்கம் அளித்துள்ளது. 1974ல் இருந்து 45 ஆண்டுகளாக கர்நாடக அரசு காவிரி ஒப்பந்தத்தை எப்பொழுதுமே பின்பற்றியது இல்லை. 1991ல் 11 லட்சம் ஏக்கராக இருந்த கர்நாடகாவின் பாசன பரப்பு தற்போது 21 லட்சமாக அதிகரித்துள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே, கபினி, ஹேமாவதி, ஹாரங்கி உட்பட ஐந்து ஆறுகளில் அணைகளைக் கட்டி 80 முதல் 90 டிஎம்சி தண்ணீர் வரை தடுத்தது கர்நாடகம். அதுவே இன்னும் முறைப்படுத்தப்படவில்லை. இப்போது காவிரி விவாகரத்திலும் நடுவர் மன்ற தீர்ப்பை மதிக்காமல் செயல்படுகிறது.
காவிரி மேலாண்மை ஆணையம் என்ன சொல்கிறது?
1956-ம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர்ப்பூசல் சட்டம் அமலுக்கு வந்தது, இதன் மூலம் இந்தியாவில் பல மாநிலங்களில் உருவான நதிநீர் பிரச்னைகள், தீர்ப்பாயங்கள் மூலம் தீர்த்து வைக்கப்படுகிறது. காவிரி மேலாண்மை ஆணையத் தீர்ப்பின் படி, கர்நாடகாவில் மழை அளவு குறைந்தால் அந்த அளவை மட்டும் குறைத்துக்கொண்டு மீதமுள்ள தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும். அப்படி கணக்கு பார்த்தால் இப்போது கொடுக்க வேண்டிய 37 டிஎம்சி தண்ணீரில் 13 சதவிகிதத்தை குறைத்துக்கொண்டு மீதமுள்ள தண்ணீரை திறக்க வேண்டும். ஆனால் 37 டிஎம்சியில் இதுவரை 7 டிஎம்சி மட்டுமே வந்துள்ளது. 2007 காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு இதுவரை ஜூன், ஜூலை மாதங்களில் ஒரு முறைகூட சரியாகத் தண்ணீர் திறந்து விடவில்லை கர்நாடக அரசு. அவர்களின் அணைகள் கொள்ளளவைத் தாண்டினால் மட்டுமே தமிழகத்துக்கு தண்ணீர் தருகிறார்கள்.
தமிழகத்தின் நிலை
தமிழகத்தில் 90 அணைகள் உள்ளன. இவற்றின் மொத்த கொள்ளளவு 224.297 மில்லியன கன அடி. தற்போது இந்த அணைகளில் மொத்தம் 87.604 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது. அணைகளின் மொத்த கொள்ளளவில் 39% மட்டுமே நிறைந்திருக்கிறது. இதனால் டெல்டா மாவட்ட மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலம் குறுவை சாகுபடிக்கான காலம். ஆனால் தமிழகத்துக்கு அக்டோபரில் தொடங்கும் வடகிழக்குப் பருவ மழை தான் அதிக மழை தருவதாகும். எனவே குறுவை காலத்தில் குறுகிய கால பயிர்கள் விளைவிக்கப்படும். இவை 100-120 நாட்களில் விளையக்கூடிய பயிர்கள்.