இந்தியாவை உற்றுநோக்கும் உலகம்: ஜி20 மாநாட்டுக்கு பிறகு உலக மாற்றம்? ஓர் அலசல்!
2023ம் ஆண்டுக்கான ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் நடக்கிறது. இந்தியா தலைமை பொறுப்பு ஏற்று நடத்துகிறது. இதில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கிறது என ஒரு சிலர் நினைக்கலாம். மாநாடு பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்னர், கொஞ்சம் ஜி20 அமைப்பு பற்றியும், அதன் வலிமை பற்றியும் அறிந்து கொள்வோம்.
ஜி20 அமைப்பு உருவாக்கம்
1997களில் ஆசியாவில் நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதனை தொடர்ந்து 1999ல் ஜி20 அமைப்பு உருவாக்கப்பட்டது. உலகில் அவ்வப்போது ஏற்பட்டுவரும் பொருளாதார மந்தநிலை, தேக்கநிலையைக் கருத்தில் கொண்டு அதை எதிர்கொள்ளும் வகையில் உலகப் பொருளாதார நெருக்கடிகளை அலசி ஆராய்வதற்காக நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி கவர்னர்களை உறுப்பினர்களாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட அமைப்புதான் G-20.
2007ல் உலக அளவில் பொருளாதார நெருக்கடி கடுமையாக இருந்ததைக் கருத்தில் கொண்டு நாட்டை ஆளும் பொறுப்பில் இருக்கக்கூடிய தலைவர்களும் பங்கேற்கும் வகையில் கூட்டமைப்பானது விரிவாக்கப்பட்டது.
ஐரோப்பியம் ஒன்றியம் உட்பட 20 நாடுகள் இதில் உறுப்பினராக உள்ளன. கூட்டாக, ஜி-0 பொருளாதாரம் மொத்த உலக உற்பத்தியில் 85%ம், உலக வணிகத்தில் 80%ம், உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும் கொண்டுள்ளது. ஜி-20 அரசுத் தலைவர்கள் அல்லது நாட்டுத் தலைவர்கள் இதன் உச்சிமாநாடுகளில் கலந்து கொள்கின்றனர்.
ஜி-20 குழுவின் அதிகாரம்
ஜி-20 குழுவில் பிரேசில், கனடா, சீனா, அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சௌதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து ஆகிய 19 நாடுகள் உள்ளன. இவற்றோடு ஐரோப்பிய ஒன்றியம் இந்தக் குழுவில் 20வது உறுப்பினராக உள்ளது.
இது தவிர, ஒவ்வொரு ஆண்டும் இக்குழுவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நாடு சில நாடுகளையும் அமைப்புகளையும் விருந்தினர்களாக அழைக்கிறது. 2023ம் ஆண்டுக்கு தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியா, வங்கதேசம், எகிப்து, மொரிஷியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின், மற்றும் ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.