தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்த பெருமளவு நிதியை வாரி இரைக்கும் மத்திய அரசு! 2014 முதல் 2022 வரை ஒரு ஒப்பீடு!
மத்திய அரசு 2022-2023ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், ரூபாய் 1.99 லட்சம் கோடி என்ற பெரும் தொகையை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு ஒதுக்கியது. இதுபோன்ற பெருமளவு நிதி ஒதுக்கீடுகளால், தற்போது தேசிய நெடுஞ்சாலை துறையின் வளர்ச்சி மேம்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2014'இல் பா.ஜ.க ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், நாட்டின் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதற்காக, மத்திய அரசு பல ஆயிரம் கோடிகள் முதலீட்டில் பல்வேறு விரைவுச்சாலை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வரிசையில், தேசிய அளவில் பேசுபொருளான திட்டம்தான் உத்திரப்பிரதேச "புத்தல்கண்ட் விரைவுச் சாலை திட்டம்". ரூபாய் 14,840 கோடியில் 296 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இத்திட்டம், கடந்த 2020'ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு வெறும் இருபத்தி ஒன்பது மாதங்களிலேயே முடிக்கப்பட்டு, நேற்று பிரதமர் மோடியால் நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இப்படி மலைக்கவைக்கும் திட்டங்களை மத்திய அரசு மக்களுக்கு அர்ப்பணித்து வரும் நிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை தொடர்புடைய மற்றொரு முக்கியமான புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது.
அதாவது கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் கணக்கின்படி, தேசிய நெடுஞ்சாலையின் நீளம் 91,287 km. 2021 ஆம் ஆண்டின் கணக்கின்படி தேசிய நெடுஞ்சாலையின் நீளம் 1,41,000 km. கிட்டத்தட்ட 50 சதவீதம் அளவிற்கு தேசிய நெடுஞ்சாலையின் தூரம் அதிகரித்துள்ளது.
சராசரியாக ஒரு தினத்திற்கு தேசிய நெடுஞ்சாலையின் கட்டுமானம் 12 கிலோ மீட்டரிலிருந்து, 2020-2021 ஆண்டில் 37 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது.
கடந்த 2013-14 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், வெறும் 30 ஆயிரம் கோடி மட்டுமே சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு அன்றைய காங்கிரஸ் அரசால் ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது 2022-2023 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், 1.99 லட்சம் கோடி தொகையை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.