தி.மு.க-வின் விளம்பர அறிவிப்பா? ஓசூர் பன்னாட்டு விமான நிலையம்.. 2033-ல் தான் சாத்தியம்.. முழு விவரம்..
ஒசூரில் பன்னாட்டு விமான நிலையம்:
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 7வது நாள் அமர்வில், ஒசூரில் 2000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒசூரில் 2,000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் வந்துசெல்லும் வகையில் விமான நிலையம் அமைக்கப்படும் என கூறி உள்ளார். ஆனால் இதில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் உள்ளன என்று பல்வேறு தரப்பில் இருந்து கருத்துக்கள் வலுவாக இருக்கிறது. குறிப்பாக இது நடைமுறையில் சாத்தியமா? என்பது குறித்தான தகவல்களை தற்போது பார்க்கலாம்.
ஆரம்ப சுழி 2022-ஆம் ஆண்டு:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்திருக்கிறார். ஏற்கனவே இதுகுறித்து கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி அன்று, திமுக மாநிலங்களவை உறுப்பினர்(MP) வில்சன் அவர்கள், ஓசூர் விமான நிலையம் குறித்துக் கேட்ட கேள்விக்கு, அன்றைய தினத்தின் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெனரல் V.K.சிங் அவர்கள், தெளிவாகப் பதிலளித்துள்ளார்.
உடான் திட்டத்தின் கீழ் சத்தியம் இல்லை:
இதுதொடர்பாக அவர் கூறும் போது, இந்திய அரசு மற்றும் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கிடையேயான ஒப்பந்தத்தின்படி, பெங்களூர் சர்வதேச விமான நிலையம் தொடங்கப்பட்ட 2008 ஆம் ஆண்டிலிருந்து 25 ஆண்டுகளுக்கு, 150 கி.மீ. சுற்றளவில், புதிய விமான நிலையங்கள் அமைக்க முடியாது என்பதையும், ஓசூரில் அமைந்துள்ள விமான நிலையம், TAAL என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான விமான நிலையம் என்பதால், மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் மேம்படுத்த முடியாது என்பதையும், ஓசூர் விமான நிலையத்தைப் பயணிகள் பயன்படுத்தும் வண்ணம் மேம்படுத்த ஆகும் செலவு 30 கோடி ரூபாய் என்றும் விளக்கமாகக் கூறியதோடு, மத்திய விமானப் போக்குவரத்துத் துறையின் ஆய்வு முடிவுகளையும் எடுத்துக் கூறியிருந்தார்.