இனி இந்திய அரசியலை முடிவு செய்யும் பெண்கள்: 27 வருட கனவை சாத்தியமாக்கும் மோடி அரசு - ஓர் அலசல்!
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ளது. வாஜ்பாய் அரசு பலமுறை முயன்றும் நிறைவேற்ற முடியாமல் போன ஒன்றை செய்யும் வாய்ப்பு தனக்கு கிடைத்திருப்பதாக பிரதமர் கூறியுள்ளார். அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சியின் போது மகளிர் இடஒதுக்கீடு மசோதா பல முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் மசோதாவை நிறைவேற்ற போதுமான பெரும்பான்மை இல்லாததால் அந்த கனவு முழுமையடையாமல் இருந்தது. இப்போது அதற்கான நேரம் வந்துள்ளது என பிரதமர் மோடி கூறினார். புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு எம்பிக்கள் சென்ற பிறகு நிறைவேற்றப்படும் முதல் மசோதா இதுவாகும்.
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா என்றால் என்ன?
அரசியலமைப்பு 108வது திருத்த மசோதா, 2008, மாநில சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் உள்ள மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கை (33%) பெண்களுக்கு ஒதுக்க முயல்கிறது. இந்த மசோதா 33% ஒதுக்கீட்டிற்குள் SC, ST மற்றும் ஆங்கிலோ-இந்தியர்களுக்கு துணை இடஒதுக்கீட்டை முன்மொழிகிறது. ஒதுக்கப்பட்ட இடங்கள் மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் உள்ள வெவ்வேறு தொகுதிகளுக்கு சுழற்சி முறையில் ஒதுக்கப்படலாம். திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு பெண்களுக்கான இட ஒதுக்கீடு இன்னும் அமலுக்கு வரவில்லை. 33 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தால் தமிழகத்தில் 77 பெண் சட்டமன்ற உறுப்பினர்களும் 13 பெண் பாராளுமன்ற உறுப்பினர் இருப்பார்கள்.
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா: வரலாறு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1989 ஆம் ஆண்டு மே மாதம், கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளில் பெண் இடஒதுக்கீட்டிற்கான விதையை முதன்முதலில் விதைத்தார். இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் செப்டம்பர் 1989 இல் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படவில்லை.