மோடி 3.0 அரசு.. ஆட்சி அமைத்த 100 நாட்களில் செய்த மகத்தான சாதனைகளின் தொகுப்பு..
பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக்காலத்தின் முதல் 100 நாட்களின் முக்கிய முன்முயற்சிகள், முடிவுகள், சாதனைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுதில்லியில் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கடந்த 100 நாட்களில் முக்கிய சாதனைகளை சித்தரிக்கும் 'வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான பாதையை அமைத்தல்' என்ற சிறப்பு கையேட்டையும், எட்டு துண்டுப் பிரசுரங்களையும் அமித் ஷா வெளியிட்டார். மத்திய தகவல் ஒலிபரப்பு, ரயில்வே, மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். நரேந்திர மோடி ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தார் என்றும், அவர் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பிரதமராகி உள்ளார் என்றும் கூறினார். உலகின் 15 வெவ்வேறு நாடுகள் அவருக்கு தங்கள் நாட்டின் மிக உயர்ந்த கௌரவத்தை வழங்கியுள்ளன எனவும் அமித் ஷா குறிப்பிட்டார். இது நமது பிரதமரின் பெருமையை மட்டுமல்ல, முழு இந்தியாவின் பெருமையையும் அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார். இன்று நாட்டின் 140 கோடி மக்கள் பிரதமர் நரேந்திர மோடியின் நீண்ட ஆயுளுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்கள் என்று அமித் ஷா கூறினார்.
இந்தியாவின் வளர்ச்சி, பாதுகாப்பு, ஏழைகளின் நலனுக்காக தொடர்ந்து 10 ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் அரசை நடத்திய பின்னர், 2024 மக்களவைத் தேர்தலில் மூன்றாவது முறையாகவும் அரசை அமைப்பதற்கான ஆணையை நாட்டு மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனர் என அவர் தெரிவித்தார். 60 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக, ஒரு தலைவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்று நாட்டை வழி நடத்துகிறார் என்று அவர் கூறினார். 60 ஆண்டுகளில் முதல் முறையாக, நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையின் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். 11-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பது, எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப கொள்கைகள் செயல் படுத்தப்படுவதை உறுதி செய்யும் என அவர் கூறினார். இந்த 100 நாட்களில், ஏழை, நடுத்தர மக்களுக்கு பல நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். முத்ரா கடனுக்கான வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கும் அதிகாரம் அளிக்கப்பட்ட இளைஞர்கள் முதன்மையானவர்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். அடுத்த 5 ஆண்டுகளில் 4 கோடியே 10 லட்சம் இளைஞர்கள் பயனடையும் வகையில், ரூ.2 லட்சம் கோடிக்கு பிரதமரின் தொகுப்புத் திட்டத்தை அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.