காவேரி கூக்குரல் சார்பில் மதுரையில் 5 லட்சம் மரங்கள் நடத்திட்டம்!..அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்
ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்தாண்டு மதுரை மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் 5,00,000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இன்று (01-06-2024) நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. பி.மூர்த்தி அவர்கள் மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கி இந்நிகழ்வை தொடங்கி வைத்தார்.
சுற்றுச்சூழலுடன் சேர்த்து விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் விதமாக மரம் சார்ந்த விவசாய முறையை ஊக்குவிக்கும் பணியில் காவேரி கூக்குரல் இயக்கம் மிக தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. தமிழ்நாட்டில் இவ்வியக்கம் மூலம் இந்தாண்டு (24-25 நிதியாண்டில்) 1.21 கோடி மரங்கள் விவசாய நிலங்களில் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்டம் தோறும் இதன் தொடக்க விழாக்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன.
அந்த வகையில் மதுரை மாவட்டம், அழகர் கோவிலில் உள்ள மகாத்மா காந்தி பள்ளியில் நடைப்பெற்ற இதன் தொடக்க விழாவில் அமைச்சர் திரு. பி.மூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் மரக்கன்றை நட்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் இவ்விழாவில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு. வெங்கடேசன் மற்றும் மகாத்மா மான்டசரி பள்ளியின் நிர்வாகிகள் திரு. கார்த்திக், திருமதி. ஹம்ச பிரியா ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் அமைச்சர் திரு. பி.மூர்த்தி அவர்கள் பேசுகையில், “இன்றைய காலத்தில், எது பலன் தரக்கூடிய பணப்பயிர் என்பதை அறிந்து நட்டு வளர்த்தால் அது பயிர் விவசாயத்தை விட பல மடங்கு வருவாயை தரும். எனவே இப்போது தரப்படுகிற இந்த மரக்கன்றுகளை வளர்த்து உருவாக்கிவிட்டால் அதன் மூலமாக வரக்கூடிய வருவாய் மிகப்பெரிய அளவில் உயரும். வருவாயோடு சுற்றுச்சூழலும் முக்கியம் என்கிற வகையில் வழங்குப்படும் மரக்கன்றுகளை உங்கள் வீடுகளில், முடிந்த இடங்களில் எல்லாம் நட்டு வைக்க வேண்டும். இது பார்க்க எளிமையான நிகழ்வாக இருந்தாலும், மக்களுக்கு மிகவும் பயனுள்ள நிகழ்வாக இது இருக்கிறது. காலத்தின் சூழ்நிலை, நாட்டின் எதிர்காலம் இவை அனைத்தையும் மனதில் வைத்து நடத்தப்படும் இந்த நிகழ்வு வெற்றிகரமாக அமைய என் வாழ்த்துகள்" எனக்கூறினார்.