இந்திய வாகன துறையை புரட்டிப்போடும் Bharat NCAP - மத்திய அரசின் அபார முன்னெடுப்பு - ஓர் அலசல்!
மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் பாரத் என்சிஏபி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டம் கார் தயாரிப்பு வாகனங்களுக்கு கட்டாயமானது அல்ல. கார் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் தயாரிக்கும் கார் பாதுகாப்பானது என்பதை வாடிக்கையாளர்களிடம் நிரூபிக்க விரும்பினால் இந்த பாரத் என்சிஏபி பரிசோதனையில் பங்கேற்கலாம். ஒரு கார் விபத்தில் சிக்கும் போது அதன் பாதுகாப்பு எந்த அளவில் இருக்கும் என்பதை அளவிட்டு அதற்கு ஏற்ப நட்சத்திர குறியீடு வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம்.
திட்டத்தின் தொடக்கம்
இந்தியாவில் சாலை விபத்துகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கை, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளை விட மூன்று முதல் நான்கு மடங்கு அதிகம். இந்திய வாகன பாதுகாப்பு தரநிலைகள் போதுமானதாக இல்லை. இந்தியா உலகின் ஆறாவது பெரிய கார் சந்தையைக் கொண்டுள்ளது, ஆனால் வாகனங்களின் பாதுகாப்பை அளவிடும் சோதனைத் திட்டம் இல்லாத உலகின் முதல் பத்து கார் சந்தைகளில் உள்ள ஒரே நாடாக இந்தியா உள்ளது. இதனை உணர்ந்து 2014 ஆம் ஆண்டின் மத்தியில் Bharat NCAPதொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஆய்வகங்கள் மற்றும் பிற வசதிகளை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் 2017ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. பிறகு 2022ல் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது. செயல்படுத்தப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள், இந்தியாவில் விற்கப்படும் புதிய கார்கள் இந்த சான்றிதழ் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. விபத்து பாதுகாப்பு செயல்திறன் சோதனைகளின் அடிப்படையில் ஸ்டார் மதிப்பீடுகள் வழங்கப்படும்.
கார்களில் ஏர்பேக்குகள் , ஏபிஎஸ் மற்றும் சீட் பெல்ட் நினைவூட்டல்கள் போன்ற முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள் தரவரிசை ஆகியவை ஆய்வு செய்யப்படும். கட்டாய விபத்து சோதனை இந்தியாவில் விற்கப்படும் கார்களில் கொண்டு வரப் படும். இந்தியாவில் வாகனங்கள் இந்த விதிமுறைகளுக்கு இணங்குவதன் விளைவாக 8-15% அதிகமாக செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவின் வாகனப் பாதுகாப்புத் தரங்களை உலகளாவிய தரத்துடன் ஒத்திசைப்பது, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கார்களை உலகளவில் ஏற்றுமதி செய்ய வாகன உற்பத்தியாளர்களுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.